இரத்தினபுரி பகுதியில் கொள்ளையிடப்பட்ட 13 முச்சக்கரவண்டிகளுக்கு போலி ஆவணங்கள் மற்றும் இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்டு, அந்த முச்சக்கரவண்டிகள் மீள விற்பனை செய்யும் வர்த்தகம் தொடர்பில் கைது செய்ய முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கைது செய்ய சென்ற சந்தேகநபருக்கு சொந்தமான இரத்தினபுரி – மிஹிதுகம பகுதியிலுள்ள வீட்டிலிருந்து அடையாளம் உறுதிப்படுத்தப்படாத 12 முச்சக்கரவண்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதேபோன்று, 2 சிறிய ரக லொறிகள், 2 கெப் வாகனங்கள், லொறி மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட 30 வாகனங்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமது முச்சக்கரவண்டி திருடப்பட்டுள்ளது என்றால், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
