ஆப்கானிஸ்தானின் அயல்நாடுகளில் அமெரிக்கப் படைத்தளங்கள் செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என தலிபான் இயக்கம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உடன்பாடொன்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து தலிபான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை செப்டெம்பர் 11 ஆம் திகதியுடன் வாபஸ் பெறுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் கிளர்ச்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு புதிய தளங்களை அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக ஊகங்கள் நிலவுகின்றன.
எனினும், பாகிஸ்தானில் இராணுவத் தளமொன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது என்பது பொய்யானது என ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவப் பேச்சாளர் சொனி லெக்கெட் கூறியுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் வெளிவிவகார அசை;சர் ஷா மஹ்மூத் குரேஷி கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க இராணுவத் தளம் அமைப்பதற்கு பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது எனக் கூறியமை குறிப்பிடத்தக்கது.
