- பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்.
கொரோனாவினால் மரணமடைவோர் தற்போது ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர மாற்று இடங்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சகல பாகங்களிலும் கொரோனாவினால் மரணமடைவோரின் உடல்கள் இன, மத பேதமின்றி ஓட்டமாவடியில் மட்டுமே நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் மிகக் குறுகிய காலத்தில் 200 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
வைத்தியர்களின் அறிக்கைப்படி அடுத்து வரும் வாரங்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். இப்படி அதிகரிக்கும் போது ஓட்டமாவடியில் அடக்கத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி போதாமல் போகலாம்.
எனவே, இப்போதே கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய மாற்று இடங்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் இது குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே இறக்காமம், புத்தளம், மன்னார், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் மாற்று இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பொருத்தமானவற்றை உறுதிப்படுத்தி அவ்வப் பிரதேசத்தோடு அண்டிய பகுதியில் உடல்கள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யலாம். இறந்த உடல்கள் இராணுவப் பாதுகாப்போடு தான் ஓட்டமாவடிக்கு எடுத்தச் செல்லப்படுகின்றன. இதற்காக அரசுக்கு செலவீனங்கள் உள்ளன. இவ்வாறு மாற்று இடங்களை உறுதிப் படுத்துவதன் மூலம் தூரங்களைக் குறைத்து அரச செலவினங்களையும் குறைக்க முடியும்.
எனவே, அரசு இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கொரோனா மரணங்களால் மரணிப்போரை அடக்க மாற்று இடங்களையும் அடையாளப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பது மிகவும் உசிதமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா மத்திய நிருபர்
