Our Feeds


Tuesday, June 22, 2021

www.shortnews.lk

குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்கியு, சொகுசு வாகனங்களில் பயணிப்போருக்கு பொதுமக்களின் கஷ்டங்கள் தெரியாது - இம்ரான் மஹ்ரூப் சாடல்.

 (ஹஸ்பர் ஏ ஹலீம்)


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொதுமக்களை இன்னல்களுக்குட் படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக எனது குரல் என்றும் ஒலிக்கும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: பொதுமக்கள் முகங்கொடுத்துள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பற்றிய எந்தவொரு சிந்தனையுமின்றி அரசாங்கம் எரிபொருளுக்கு அதிகபட்ச விலையுயர்வை செய்துள்ளது. ஏற்கனவே கஷ்டங்களை அனுபவித்துவரும் பொதுமக்களுக்கு இது மேலும் சுமையைக் கூட்டியுள்ளது.

குறிப்பாக மீனவர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அவர்கள் மிகச் சிலருடன் சேர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்த எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக அடையாள எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டேன்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக எனக்கும், அந்த மீனவர்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்துக்குச் சென்று தற்போது நாம் பிணையில் வந்துள்ளோம்.

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம், பயணத்தடை என்பன அமுலில் இருந்தாலும் நாளாந்தம் அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதிகளில் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு இதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதேபோல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பல்வேறு வகையான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கு சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும் பொதுமக்களும் நிவாரணம் வழங்குகின்ற குழுவினரும் ஒன்று சேர்கின்றனர்.

ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அலுவலகங்கள் இயங்குகின்றன. அலுவலக ஊழியர்களின் ஆசன அமைப்பு முறை நமக்கெல்லாம் தெரியும். வரையறுக்கப்பட்ட ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் அருகருகேயுள்ள தங்களது ஆசனங்களில் இருந்து பணி செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அன்றாடம் எல்லா நடவடிக்கைகளுக்கும் அனுமதி இருக்கின்ற போது அரசாங்கத்துக்கு பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை எடுத்துச் சொல்ல மட்டும் எமக்கு அனுமதி இல்லை. இது தான் அரசாங்கத்தின் கொள்கை.

அரிசி, மாவு, கடலை, பயறு உள்ளிட்ட சகல உணவுப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. எனினும், பாமர மக்களால் வழமைபோல தொழில் செய்யவோ வருமானம் ஈட்டவோ முடியாத கட்டுப்பாட்டு நிலை காணப்படுகின்றனது. எனவே, வருமானம் இழந்துள்ள பலர் தமது நாளாந்த உணவுக்காக பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்ற இவ்வேளையில் அரசாங்கம் அதிகபட்ச எரிபொருள் விலை அதிகரிப்பை செய்துள்ளது.

கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்கி இருந்து சொகுசு வாகனங்களில் பயணிப்போருக்கு பொதுமக்களின் இந்தக் கஷ்டங்கள் தெரியாது. அவர்களுக்கு பொது மக்களின் இந்தக் கஷ்டங்கள் தெரிந்திருந்தால் எரிபொருளுக்கு இவ்வாறான அதிகபட்ச விலை உயர்வு வந்திருக்காது.

நான், எனது கட்சிக்கும் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் இழைத்து 20 க்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை. அதற்காக எம்மை அடக்கி பொதுமக்களுக்கான எமது குரலை நசுக்க அரசு கவனம் செலுத்துகின்றது. இதனை பொதுமக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.

எனவே, பொதுமக்களுக்கான எமது சாத்வீகப் போராட்டம் தொடரும். பொதுமக்கள் எதிர்நோக்கும் சகல துன்பங்களிலும் நாம் கவனம் செலுத்துவோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »