Our Feeds


Wednesday, June 23, 2021

www.shortnews.lk

சட்டமூலங்கள் எல்லாமே பெரும்பான்மை இன மக்கள் நலன்களுக்கு மட்டுமானதா? - த.தே.கூ கேள்வி

 இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.


நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தொடர்பான சட்டமூல விவாதம் இங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டமூலங்கள் தொடர்பான விவாதங்கள், திருத்தங்கள் எல்லாமே பெரும்பான்மை இன மக்களது நலன்களுக்கு மட்டுமானதா? அல்லது இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உரித்தானவையா? ஏனென்றால் நீங்கள் மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயல்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையை பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை.

இந்த அரசாங்கம் இனவழிப்பு மூலமாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிற்பாடு வடகிழக்கிலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் முப்படையினராலும் ஆக்கிரமித்தது. அந்த வகையிலே வடக்கிலே பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் தமிழர்களது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. ஆனால் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற செலந்திவ இணை நிறுவனத்தை உருவாக்கும் அமைச்சரவை பத்திரம் மூலமாக உருவாக்குகின்ற நிறுவனம் ஊடாக பல நிலங்களை சீனாவிற்கு விற்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு விற்கப்படவுள்ள இடங்களில் ஒன்று கீரிலையில் உள்ள ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ஏழு ஏக்கர் நிலப்பரப்பும் அடங்குகின்றது. கீரிமலையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தேசிய பாதுகாப்பு என்ற போர்வையிலே கையகப்படுத்தி அங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்கள் தமிழ் மக்களுக்கு மீளவும் வழங்கப்படவில்லை. ஏழு ஏக்கர் பரப்புள்ள அந்த நிலம் இப்பொழுது சீனாவிற்கு குத்தகைக்கு விடப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இந்த செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எங்களைப் பொறுத்தவரையில் வடகிழக்கில் எந்த ஒரு பகுதியும் தமிழ் மக்களுடைய விருப்பங்களுக்கு மாறாக எந்தவொரு நாட்டிற்கும் குத்தகைக்கு வழங்கப்படக்கூடாது. அத்தோடு இந்த நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும்.

அத்துடன், கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களை விடுதலை செய்யப் போவதான ஒரு விடயம் இன்று பாராளுமன்றத்திலே பிரஸ்தாபிக்கப்பட்டது. அது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் நீங்கள் கைதிகளை விடுவிக்கிறோம் என்று சொல்வதும் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று சொல்வதும் நீங்கள் நீங்கள் விரும்பியவாறு முடிவெடுக்க முடியாது.

தற்போது இலங்கையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு கொடூரமான சட்டம். இந்த சட்டத்தினால்தான் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். ஆகவே இந்த கொடிய சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதனை இந்த அவையில் ஆணித்தரமாக வலியுறுத்தி இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்ற அதே நேரத்தில் எதிர்காலத்திலும் தமிழர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டுமாகவிருந்தால் சர்வதேச ரீதியிலேயே ஒரு கொடூரமான சட்டமாக விமர்சிக்கப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

கடந்த மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்திலே இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக 10 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அப்பாவிகளான அவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். குருசுமுத்து லவக்குமார் (கிரான்), விநாகமூர்த்தி பிரதீபன் (கிரான்), சிங்கரெட்ணம் சத்தியதாசன் (ஓமடியாமடு), குமாரசிங்கம் ஜிவிதா (ஓமடியாமடு), ஆறுமுகம் ஞானசேகரம் (வந்தாறுமூலை), அழகரெத்தினம் கிருஷ்ணா (வந்தாறுமூலை), கந்தலிங்கம் யேசுசகாயம் (கிரான்), பஞ்சாட்சரம் துவிதா (மண்டூர்), விமலசேன குருசுமுத்து (கிரான்), செல்வநாயகம் நேசன் (ஓமடியாமடு) ஆகிய பத்துப்பேரும் வெறுமனே ஒரு நினைவேந்தல் நிகழ்வை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டு தற்பொழுது ஒரு மாதம் கடந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். அவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.

இந்த பயங்கரவாத தடை சட்டமானது தமிழ் மக்கள் மீது ஒடுக்கு முறைகளையும், வரையறையற்ற அதிகாரங்களையும் வழங்குகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »