Our Feeds


Thursday, June 24, 2021

www.shortnews.lk

திஸ்ஸமஹாராம வாவி வேலையில் ஈடுபடுவோர் சீன இராணுவத்தினர் அல்ல! அவர்கள் சீன தொழிலாளர்கள் - சீன தூதரகம் அறிக்கை

 


 

(நா.தனுஜா)


இலங்கையில் சீன இராணுவம் கால்பதித்து விட்டதா? என்று மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பதாக உண்மையை அறிந்துகொள்ளவேண்டும்.


இராணுவத்தினர் அணியும் ஆடையின் நிறத்தையொத்த ஆடைகளை அணிந்திருப்பவர்கள் சீனத்தொழிலாளர்களேயன்றி, அவர்கள் சீன இராணுவத்தினர் அல்ல என்று இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்திருக்கிறது.

திஸ்ஸமஹாராமய வாவி அபிவிருத்தி நடவடிக்கைகள் சீன - இலங்கைக் கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளமையையும் சீன இராணுவத்தின் சீருடையையொத்த சீருடை அணிந்த சீனப்பிரஜைகள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 'இலங்கையில் சீன இராணுவம் கால்பதிக்கின்றதா?' என்ற தலைப்பில் நாட்டின் பிரபல தொலைக்காட்டியொன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதுமாத்திரமன்றி இதுகுறித்து அந்த ஊடகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் செய்திருந்தது.

'இலங்கையின் சட்டத்தின் பிரகாரம், இராணுவத்தில் அங்கம்வகிக்காத ஒருவர் இராணுவ சீருடையையொத்த ஆடைகளை அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அணிவது சட்டத்திற்கு முரணானதாகும். அவ்வாறிருக்கையில் இலங்கையில் அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடும் சீனர்களுக்கு (இலங்கை இராணுவத்தின் ஒத்த சீருடையை அணிந்திருக்கும் சீனர்கள்) எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்ல?' என்று குறித்த ஊடகம் அதன் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தது.

அந்தப் பதிவை மேற்கோள்காட்டி, அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது.

அத்தகைய ஆடையை அணிந்திருப்பவர்கள் சீன இராணுவத்தினர் அல்ல என்றும் அவர்கள் அந்த நிறத்தில் உடையணிந்திருக்கும் தொழிலாளர்கள் மாத்திரமே என்றும் சீனத்தூதரகம் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை தவறாக வழிநடத்தக்கூடிய இத்தகைய செய்தியை வெளியிடுவதற்குப் பதிலாக உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்தத் தொழிலாளர்கள் அணிந்திருக்கும் ஆடையானது, சீனர்கள் பெரிதும் மதிப்பளிக்கும் இலங்கை இராணுவத்தின் சீருடையிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும் என்றும் இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »