ஈராக் – சிரியா எல்லைப் பகுதியில் அமெரிக்கா நேற்று வான் வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் இன்று அறிவித்துள்ளது.
ஈரான் ஆதரவுபெற்ற ஆயுதக்குழுக்களின் நிலைகளை இலக்கு வைத்து இத்தாக்கதல்கள் நடத்தப்பட்டதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 5 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் என கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
ஈராக்கிலுள்ள தனது படைத்தளங்களுக்கு எதிராக அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஈராக்கிய ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஈராக் சிரிய எல்லையில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களினால் பயன்படுத்தப்பட்ட நிலைகள் மீது அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை நடத்தியது என பெண்டகன் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து அமெரிக்கா தெரிவிக்கவில்லை. எனினும், இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 5 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்;டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என பிரிட்டனைத் தளமாகக் கொண்ட, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.