Our Feeds


Tuesday, July 27, 2021

www.shortnews.lk

அனைவரும் நகர வசதியை அனுபவிக்கும் வகையில் முறையான 100 நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோம் - பிரதமர் மஹிந்த

 



அனைவருக்கும் நிலையான நகரத்தின் வசதிகளை அனுபவிக்கக் கூடிய வகையில் முறையான நூறு நகரங்களை நாட்டு மக்களுக்கு உரித்தாக்குவோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (27) முற்பகல் தெரிவித்தார்.


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரே தடவையில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் 'நூறு நகரங்கள் அபிவிருத்தி திட்டம்' குருநாகல் ஹிரிபிட்டிய நகரில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மேற்படி தேசிய நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


கௌரவ பிரதமர் தலைமையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதை குறிக்கும் வகையில் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ நாலக கொடஹேவா அவர்களினால் ஹிரிபிட்டிய நகரை அபிவிருத்தி செய்வதற்கான பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.


நூறு நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக ஒரு நகரை அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதற்காக அரசாங்கம் செலவிடும் தொகை 20 மில்லியன் ரூபாயாகும். அதற்கமைய நூறு நகரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக 2000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.


குறித்த நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துக் கொண்டு கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,


தமக்கு அண்மையிலுள்ள நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதை காண எமது மக்கள் விரும்புகின்றனர். அனைத்திற்கும் கொழும்பிற்கு செல்லாது அருகிலுள்ள நகரிலேயே தமது தேவைகளை நிறைவுசெய்துக் கொள்ள முடியுமாயின் சிறப்பாக இருக்கும் என மக்கள் எண்ணுவதில் தவறில்லை.


ஆனால், காலம் காலமாக எவ்வித திட்டமிடலுமின்றி அபிவிருத்தி செய்யப்பட்டு வந்த நகரங்கள் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. நமது நாட்டின் பல நகரங்கள் சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.


இந்த நகரங்களை முறையாக பேணி வசதிகளை மேம்படுத்தி, கண்ணை கவரும் நகரங்களாக மாற்ற எத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படினும் அவை பயனற்று போனது.


சில சந்தர்ப்பங்களில் நகரமொன்றின் பணியை ஆரம்பித்தவுடன் தேர்தல் இடம்பெற்று ஆட்சியில் இருந்தவர்கள் தோல்வியடைந்தவுடன் அப்பணி அத்துடன் இடைநிறுத்தப்படும். மேலும் சில திட்டங்கள் எந்நாளும் ஒரே நகருக்கு வரையறுக்கப்பட்டதாக விளங்கும். அதனால் தமது நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என்ற எண்ணம் மக்களிடையே இல்லாது போனது.


இன்று இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் நகரும் அது போன்றதொரு நகரம் ஆகும். இந்நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என எவ்வித நம்பிக்கையும் இருக்கவில்லை.


அதனால் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு வழிவகுத்தது மாத்திரமன்றி, முறையான வடிகாலமைப்புகள் அற்ற ஒழுங்கற்ற நகரங்களாக மாறின. சில இடங்களில் வடிகான்கள் நிறைந்து கிடப்பதை பார்ப்பதற்குக்கூட எவரும் இல்லை. அனைத்து இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்தக்கூட இடமில்லை.


நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்கள் தாமாக முன்வந்து வெற்று சுவர்களை ஓவியங்கள் வரைந்ததை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த இளம் தலைமுறையினர் கிராமத்திலிருந்து தொடங்கி முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாக விளங்க விரும்பினர். அன்றும் இன்றும் அதை நாம் பாராட்டினோம். கொவிட் வந்து அவற்றை மட்டுப்படுத்தியபோது, சிலர் இளைஞர்களை நோக்கியும் ஏளனஞ்செய்தனர். இப்போது எங்கே வண்ணம் தீட்டுவதில்லையா? என்று கேட்டனர். நாங்கள் அவர்களை மறந்துவிட்டோம் என்று அவர்கள் நினைத்தார்கள்.


அவர்களின் தேவையை நாங்கள் கண்டோம். நம் நாடு என்று பெருமையுடன் கூறும் ஒரு தலைமுறையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. இதை சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாககொள்கை திட்டத்தின் ஊடாக  உறுதிப்படுத்தினோம். இன்று தொடங்கப்பட்டு வரும் இந்த நூறு நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் உங்களின் நம்பிக்கையை நாங்கள் பலப்படுத்துகிறோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.


இது வெறும் ஆரம்பம் மாத்திரமே. உங்களது கிராமத்திற்கு வரும்வரை இந்த வேலைத்திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்.


இதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மாத்திரமன்றி, உங்களது நகர சபை, பிரதேச சபை, நீர் வழங்கல் சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களதும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அதற்கு உங்களது ஒத்துழைப்பும் கிடைப்பின் அது எமக்கு பெரும் பலமாகும்.


இத்திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்வதற்கே எதிர்பார்த்துள்ளோம். இதற்கு நகர்ப்புற கட்டட வடிவமைப்பாளர்கள், புவியியலாளர்கள், வாஸ்து நிபுணர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வோம். எனவே, இந்த 100 நகரங்களையும் ஒரு முறையான நகரத் திட்டத்திற்குள் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.


நகரங்களை அபிவிருத்தி செய்து தொடர்ந்து அவற்றை பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். நகரங்களை மக்களிடம் ஒப்படைத்த பின்னர் அவற்றை அழகாக வைத்திருப்பது உங்கள் அனைவரின் பொறுப்பாகும். அதற்கு எங்களுக்கு அரசதுறை மற்றும் தனியார் துறையின் ஆதரவு தேவை.


இந்த 100 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும்போது அதனை அண்மித்த கிராம மக்களுக்கு இன்னொரு படி முன்னோக்கி செல்ல முடியும். அது மட்டுமல்லாமல், மற்ற நகரங்களுக்கிடையிலான வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளையும் இது நீக்குகிறது. ஒரு நிலையான நகரத்தில் வாழ்வது உங்களுக்கு எல்லா வகையிலும் எளிதாகும்.


நாம் வரலாற்றை நோக்கினால் முறையான நகர்ப்புற திட்டமிடல் எங்களுக்கு புதியதல்ல. தொல்பொருள் வெளிப்பாடுகளின்படி, நாட்டில் முதல் திட்டமிடப்பட்ட குடியேற்றம் குறித்து தம்மென்னா கிராமம் மற்றும் அனுராதபுரம் கிராமத்திலிருந்து எடுத்துக்காட்டுகள் உள்ளன.


மக்களின் மூலமே நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த நாட்களில், நமக்கே உரித்தான நகர்ப்புற திட்டமிடல்கள் காணப்பட்டன. பண்டைய இராச்சியங்களான அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் சீகிரியா ஆகியவற்றுடன் தொடர்புடைய நகர்ப்புற கட்டிடக்கலை இன்னும் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வெளிநாட்டினர் இன்னும் நம் நாட்டிற்கு வந்து அந்தத் திட்டங்களைப் ஆய்வு செய்கின்றனர்.


நவீன நகர்ப்புற திட்டமிடலின் வரலாறு காலனித்துவ காலத்திற்கு முந்தையது. 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களின் வருகையுடன், கொழும்பை மையமாகக் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் தொடங்கியது.17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் படையெடுப்பால், கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்ட நகரத் திட்டங்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும் காலி போன்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.


ஒலிவர் வீரசிங்க அவர்களே இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட நகர மற்றும் கிராம திட்டமிடல் துறையின் தலைவராக இருந்தார்.  அனுராதபுரம் புதிய நகர திட்டமும் அவரது பணியாகும். 1940 ஆம் ஆண்டில் அவர் தொடங்கிய இந்த தனித்துவமான திட்டம், கடந்த கால இலங்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு இன்றியமையாத செயலாக கருதப்படுகிறது.


அதேபோன்றுதான் 30 ஆண்டுகால யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்னோக்கி சென்றமையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். யுத்தம் காணப்பட்ட போதிலும் நாம் அபிவிருத்தியை மறக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னர் நகர திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயற்பாட்டில் எவரும் கைவைக்கவில்லை.


அதனால் வீதிகளில் குப்பை மேடுகள் நிரம்பி காணப்பட்டன. நடைபாதையில் எவருக்கும் நடந்துச் செல்ல முடியாது. நடைபாதைகள் கடைகள் போடப்பட்டிருக்கும். வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். சிறு மழைக்கும் நீரில் மூழ்கிவிடும். வடிகான்கள் நிரம்பிவிடும். வேறு நகரங்கள் மாத்திரமல்ல கொழும்பு நகரிலும் அந்நிலைமையே.


அந்நிலைமையிலிருந்து நகரை மீளெழச் செய்வதற்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு நகர அபிவிருத்தியை ஒப்படைத்தேன். அவர் அப்பணியை சிறப்பாக நிறைவேற்றினார். அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இந்நாட்டின் நகர அபிவிருத்தியை துரிதமாக மேற்கொள்வதற்கு இன்றும் பாரிய தேவை உள்ளமையை நீங்கள் அறிவீர்கள்.


அவர் அன்று கொழும்பு வீதிகளின் ஓரத்தில் காணப்பட்ட குப்பை மேடுகளை அகற்றினார். அன்று மாநகர சபை எமக்கு கீழ் இருக்கவில்லை. எனினும், அது தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தி கொழும்பு நகர சபையையும் அப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ளப்பட்டது. கொழும்பில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு, நகரசபையை பயன்படுத்தி முறையான முறையில் குப்பை சேகரிக்கப்பட்டன.


இதற்கிடையில் வீதிகளில் குப்பைப் பைகளை வீசுவோரைப் பிடிக்க சுற்றுச்சூழல் காவல்துறை என்ற பிரிவு அமைக்கப்பட்டது. வீதிகளில் குப்பை கொட்டியவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில மாதங்களில் எங்களுக்கு பலன்கள் கிடைத்தன.


நடைபாதை காணப்படுவது பாதசாரிகளுக்கு. அதனால் நடைபாதை வர்த்தகர்களுக்கு முறையாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. நகரில் போக்குவரத்து நெரிசலைத் தணிக்க, ஒற்றை வழிச் சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போதைய நகர அபிவிருத்தி செயலாளராக இருந்த ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் இந்த விடயங்களை சற்று கடுமையாக செய்தார். அதனால்தான் கொழும்பு நகரத்தை ஒரு சாதாரண நிலைக்கு கொண்டு வர முடிந்தது.


புறக்கோட்டை மிதக்கும் சந்தை இன்று கொழும்பில் ஒரு கவர்ச்சியான இடம் என்பது உங்களுக்குத் தெரியும். அப்போது துர்மணம் வீசும், குற்றவாளிகளின் கோட்டையாகவும் திகழ்ந்த ஒரு இடத்தையே இவ்வாறு கவர்ச்சிகரமான இடமாக மாற்றப்பட்டது.


ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அதன் மதிப்பை உணராது அந்த இடத்தை மீண்டும் நாசப்படுத்த இடமளித்தது. அது மட்டுமல்லாமல், வீதியில் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த மலர்செடிகளுக்கு நீர் பாய்ச்சப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவற்றை சரிசெய்ய அதிக அதிக காலம் எடுக்க வேண்டியிருந்தது.


பத்தரமுல்ல தியத உயன, கடந்த வாரம் நாம் ஆரம்பித்த சந்தன தோப்பு போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையளிக்கும் திட்டங்களை பிற நகரங்களுக்கும் அறிமுகப்படுத்துமாறு நாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.


இத்தேசிய நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ விமல் வீரவங்ச ஆகியோர் அலரி மாளிகையில் இருந்து இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டனர்.


குறித்த நிகழ்வில் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ நாலக கொடஹேவா, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான யூ.கே.சுமித் உடுகும்புர, சரித ஹேரத், அசங்க நவரத்ன, நகர அபிவிருத்தி  அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பிரதமர்ஊடகபிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »