Our Feeds


Wednesday, July 14, 2021

www.shortnews.lk

பொலிஸார் மீது பழி சுமத்த வேண்டாம்: கைதுகள் தொடரும் - அமைச்சர் சரத் வீரசேகர.

 



(இராஜதுரை ஹஷான்)


போராட்டங்கள்  அலையாக திரண்டுள்ளமையின் நோக்கத்தை நன்கு அறிவோம். சுகாதார தரப்பினரது கோரிக்கைகளுக்கு அமையவே போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஆகவே பொலிஸார் மீது பழி சுமத்துவது பயனற்றது. பொது மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஆகவே தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் தற்போது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளார்கள். போராட்டம் அலைபோல் திரண்டுள்ளது என்றே குறிப்பிட வேண்டும். பேச்சு சுதந்திரம், மற்றும் ஒன்று கூடல் ஜனநாயக உரிமையாக காணப்படுகிறது. இதனை இவர்கள் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோள மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தை நாமும் தற்போது எதிர்கொண்டுள்ளோம். நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. இதன் காரணமாக ஒன்று கூடல் மற்றும் போராட்டங்களில் ஈடுப்படுவதற்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் கடந்த வாரம் நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு முரணான வகையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்போது பொது சுகாதார சேவை அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமையவே அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனை தவறு என எவராலும் குறிப்பிட முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »