Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

CID யின் தடுப்புக் காவலில் இருந்த ரிஷாத் எதற்காக கைது செய்யப்பட்டார்? நீதிமன்றுக்கு CID வழங்கிய விளக்கம்!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று (10) கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரை குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் குறித்த விவகார வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கவும் கட்டளையிட்டது. கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டத ரிஷாத் பதியுதீன், ஏப்ரல் 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வழங்கிய அனுமதிக்கு அமைய தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையிலேயே தடுப்புக் காவல் விசாரணைகளின் நிறைவில் அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

சிஐடியின் பொலிஸ் அத்தியட்சகர் ரந்தெனிய, பொலிஸ் பரிசோதகர் விஜேசூரிய உள்ளிட்ட குழுவினர் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் அமீர் அலி ஆகியோர் ஆஜராகினர்.

இந்நிலையில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவையில் 7 ஆவது சந்தேக நபராக ரிஷாத் பதியுதீனை முன்னிலைப்படுத்துவதாக சிஐடியினர் நீதிவானுக்கு அறிவித்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய, குண்டுதாரியான இன்சாப் அஹமட் என்பவருக்கு, இந்த சந்தேக நபர் (ரிஷாத்) எப்படி உதவி செய்தார் என்பது தொடர்பில் வெளிப்பட்டதாகவும் அதற்கமையவே சந்தேக நபரைக் கைது செய்து விசாரணை செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாகவும் சிஐடியினர் குறிப்பிட்டனர்.

சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் பரிசோதகர் விஜேசூரிய விடயங்களை முன் வைத்தார்.
‘ சினமன் கிராண்ட் தற்கொலைதாரியான இன்சாப் அஹமட்டுக்கு குளோசஸ் எனும் செப்பு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று இருந்தது. அந்த நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி சந்தேக நபர் செப்பு உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியுள்ளார்.

செப்பு தொடர்பிலான உற்பத்திகளில் ஈடுபடும் நிறுவங்களுக்கு, சந்தேக நபர் பதவி வகித்த அமைச்சின் கீழ் இருந்த நிறுவனம் ஊடாக முன்னர் மூலப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள் முன்னாள் ஜனாதிபதி செயலர் உதய ஆர் செனவிரத்ன ஊடாக வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் அந்த மூலத் திரவியங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியான நிறுவனங்கள் 3 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய, தடுத்தர மற்றும் பாரிய நிறுவனங்கள் என்பதே அந்த வகைப்படுத்தலாகும்.

இவை ஊழியர்களின் அளவு மற்றும் வருடத்துக்கான மொத்த செலவை மையப்படுத்திய வகைப்படுத்தலாகும்.

அதன்படி சிறிய நிறுவனம் என்பது 10 ஊழியர்களையும் 10 மில்லியனுக்கு குறைந்த செலவீனங்களையும் கொண்ட நிறுவனமாகும். நடுத்தர நிறுவனம் என்பது 10 முதல் 50 ஊழியர்களையும் 10 முதல் 200 மில்லியன் செலவீனத்தையும் கொண்ட நிறுவனமாகும். பாரிய நிறுவனம் என்பது 51 – 200 ஊழியர்களையும் 200 மில்லியன் முதல் 600 மில்லியன் வரையிலான செலவினையும் கொண்ட நிறுவனமாகும். இந் நிறுவங்களுக்கே அமைச்சு ஊடாக செப்பு உற்பத்திக்கான மூலத் திரவியம் ஒரு விகிதாசாரத்தின் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது.

எனினும் குளோசஸ் நிறுவனம் இந்த மூன்று வகைக்குள்ளும் உள்ளடங்காது. அதன் மாதாந்த செலவீனம் 1000 மில்லியனாகும். எனவே அந்நிறுவனத்துக்கு அமைச்சின் கீழுள்ள நிறுவனம் ஊடாக செப்பு மூலத் திரவியங்களை வழங்க முடியாது. அதனை மீறி அந்நிறுவனத்துக்கு அந்த மூலப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை குறித்த அமைச்சின் மேலதிக செயலராக இருந்த பாலசுப்ரமணியம் என்பவர் வழங்கியுள்ளார். சந்தேக நபரின் தலையீட்டுடன் அது வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கான நிதி பிரதானமாக குளோசஸ் நிறுவனத்தின் வருமானம் ஊடாகவே பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அந்நிறுவனத்துக்கு தனியார் வங்கி ஒன்றின் கொழும்பு – புறக்கோட்டை கிளையில் ஒரு கணக்கு உள்ளது. அந்த கணக்குக்கு டொலர்களின் வரும் நிதி, ரூபாவுக்கு மாற்றப்பட்டு அதே வங்கியில் உள்ள பிறிதொரு நடைமுறைக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது

( இதன்போது குறுக்கிட்ட நீதிவான் அந்த கணக்க்குகள் யரைனுடையது என கேள்வி எழுப்பினார். அவை குளோசஸ் நிறுவனத்தினுடையது என சிஐடியினர் பதிலளித்தனர்)

அவ்வறு அவ்வங்கிக் கணக்கிலிருந்து மீளப் பெறப்பட்ட 120 இலட்சம் ரூபா பணத்தை தற்கொலைதாரியின் மனைவியான உம்மு ரசீனா என்பவரிடம் இருந்து நாம் மீட்டுள்ளோம். தற்கொலைதாரியின் சகோதரி ஒருவரிடம் இருந்து ஒரு தொகை பணமும், அந்த பணத்தை வங்கியிருந்து கொண்டு செல்ல பயன்படுத்திய உறையையும் கைப்பற்றியுள்ளோம் என்றும் தெரிவித்தனர். (படங்கள் ஜே.சுஜீவகுமார்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »