(ஏ. அகீல் சிஹாப்)
தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணிக்கும், கேஷவ் மஹராஜ் தலைமையிலான தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலகக்கிண்ண சுப்பர் லீக் தொடரின் ஒருநாள் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வர்த் லூவிஸ் முறையில் 67 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்நிலையிலேயே தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இதுவரையில் 10 ஒருநாள் சர்வதேச தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் தென்னாபிரிக்க அணி 7 தொடர்களை வெற்றி கொண்டு ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இலங்கை அணி வெறும் இரண்டே இரண்டு தொடர்களில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு தொடர், அதாவது கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
இந்நிலையில் இலங்கை அணி கடந்த 2013ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடன் 4-1 என்ற அடிப்படையில் ஒருநாள் சர்வதேச தொடரை கைப்பற்றிய பின்னர் கடந்த 8 வருடங்களாக தென்னாபிரிக்க அணியுடன் இருதரப்பு ஒருநாள் சர்வதேச தொடரை கைப்பற்றவில்லை. எனவே இன்றைய போட்டியில் வெற்றிபெற்று 8 வருடங்களின் பின்னர் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
