உணவு பாதுகாப்பு தேசிய பாதுகாப்பின் ஓர் அங்கமாகும். இதனால் தேவையான சட்ட விதிகளை முன்னெடுத்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை செயற்கை ரீதியாக ஏற்படுத்துவதை தடுத்து மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற நிலையில் அதனை தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அரசாங்கதினால் முடியாது. இவ்வாறான சூழலில்தான் அரசாங்கம் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இது அனைத்துமே மக்களுக்காகவே செய்யப்படுகின்றது. மக்களின் நலன்களுக்காக அவசரகால சட்டம் மட்டுமல்ல, எந்த சட்டத்தையும் கையாள நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் எதிர்க்கட்சி மட்டுமே அதனை எதிர்கின்றது என்றார்.
இதேவேளை, ஜனாதிபதியால் அவசரகால சட்டங்கள் கொண்டுவரப்படும் போது பாராளுமன்றத்தினால் அதனை கேள்விக்கு உட்படுத்த முடியாது. நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும் இவ்வாறு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்திருந்தார்.
