அகீல் ஷிஹாப்
ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாமில் இருந்து சுழற்பந்துவீச்சாளரான அகில தனஞ்ஜய நீக்கப்பட்டுள்ள அதேவேளை, அனுபவ வேகப்பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் 15 பேர் கொண்ட குழாமில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது குழாமினை அறிவித்து விட்டன. இதில் இலங்கை அணியின் 15 வீரர்கள் மற்றும் 4 மேலதிக வீரர்களுடன் 19 பேர் உள்ளடங்கிய குழாம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் விளையாட்டுத்துறை அமைச்சரினுடைய அனுமதி பெறப்படாததன் காரணமாக இலங்கை அணியின் குழாம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழாமில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 15 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்ஜய, தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியின் போது அதிக ஓட்டங்களை வாரி வழங்கியதன் காரணமாக அவர் 15 பேர் கொண்ட குழாமில் இருந்து நீக்கப்பட்டு மேலதிக வீரர்களில் ஒருவராக மாற்றப்பட்டுள்ளார்.
அகில தனஞ்ஜயவுக்கு பதிலாக அறிமுக வீரராக சுழற்பந்துவீச்சாளர் புலின தரங்க 15 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றுள்ளார். இதேவேளை முன்னதாக மேலதிக வீரர்களுக்கான குழாமில் இடம்பிடித்திருந்த அனுபவ வேகப்பந்துவீச்சாளரான நுவான் பிரதீப் தற்போது 15 பேர் கொண்ட குழாமில் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
