Our Feeds


Wednesday, September 8, 2021

www.shortnews.lk

PHOTOS: மிகப்பெரும் அரிசி ஆலைகளான பொலன்னறுவை அரலிய, ஹிரு, நிபுண, லத்பந்துர உட்பட முக்கிய ஆலைகள் சோதனை - சுமார் 1,000 மெற்றிக் தொன் அரிசி கைப்பற்றல்.

 



பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி களஞ்சியசாலைகளை சோதனை செய்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல தலைமையிலான குழுவினர், அந்த கிடங்குகளில் இருந்து கிட்டத்தட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசியை கைப்பற்றியுள்ளனர்.


அரசால் விதிக்கப்பட்ட விலையில் அரிசி சந்தைக்கு வழங்கப்படாததால், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.


சதொச மற்றும் உணவுத் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 70 லொறிகள் பொலன்னறுவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கைப்பற்றப்பட்ட அரிசி கையிருப்பு, இன்று மதியம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் சதொச மூலம் விற்பனை செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன்படி, நிபுண, லத்பந்துர, அரலிய, ஹிரு, நிவ் ரத்ன மற்றும் சூரிய போன்ற அரிசி ஆலைகளில் காணப்பட்ட தொகைகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.



பொலன்னறுவ பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படாத அரிசித் தொகை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் கையகப்படுத்தப்பட்டதை அடுத்து, அவற்றை சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அரிசித் தொகை, நுகர்வோரான பொதுமக்களை உடனடியாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே, அரசாங்கத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் இது தொடர்பில் தெரிவித்துள்ளது.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »