Our Feeds


Wednesday, October 13, 2021

ShortNews Admin

17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பாரிய போராட்டங்கள் நடக்கும் - சுமந்திரன் MP அதிரடி அறிவிப்பு



எதிர்வரும் 17ம், 18ம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்


இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தினை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சனையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் குறிப்பாக தென் பகுதியில் அரசுக்கு எதிராக எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விவசாய அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல. அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 28 கமநல சேவைநிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கு முன்னாலும் எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி காலை 9 மணிக்கு சமூகப் பொறுப்போடு சமூக இடைவெளியினை பின்பற்றி தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை செய்யவுள்ளோம்.

தெற்கில் உள்ள ஏனைய எதிரணி அரசியல் தலைவர்களுடன் பேசி உள்ளோம். அவர்களும் தங்களுடைய பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக தமது பகுதியில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதாவது எமக்கு பசளை கிடைக்கும் வரை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் வடக்கு மீனவர்கள் அத்துமீறிய இந்திய இழுவை படகுகளினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். குறித்த இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்துவதற்கு ஏற்கனவே சட்டமூலம் இயற்றப்பட்டு உள்ள நிலையில் அதனை அரசு நடைமுறைப்படுத்த தயங்குகின்றது.

குறிப்பாக கடற்தொழில் அமைச்சராக ஒரு தமிழர் இருந்தும், அவர் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவர் அதனை செயற்படுத்தாதன் காரணமாக இந்திய இழுவைப் படகுகளின் தொல்லை வடக்கு பகுதியில் மீனவர்களை பெரிதாக பாதிக்கின்றது.

எனவே குறித்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி முல்லைத்தீவு கடலில் இருந்து பருத்தித்துறைக்கு கடல் வழியாக வந்து அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளோம். அனைத்து போராட்டங்களுக்கும் எமது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

-யாழ். நிருபர் பிரதீபன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »