Our Feeds


Saturday, October 23, 2021

ShortTalk

தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை தானும், தன் மனைவியும் கல்வி கற்ற பாடசாலைகளுக்காக செலவு செய்ய முன்வந்த பேருவலை மிஷ்பாக்பேருவளை பீ. எம் முக்தார்


அபூதாபி பிக் டிக்கட் (Big Ticket) இன் 2021 ஜூலை மாத சீட்டிலுப்பின் வெற்றியாளரான பேருவளை சீனன் கோட்டை பெருக மலையைச் சேர்ந்த முஹம்மத் மிஷ்பாக் தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை பொதுப் பணிக்காக செலவு செய்ய முன்வந்துள்ளார். 


அதற்கமைய தான் கல்வி கற்ற சீனன் கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையின் ஆசிரியர் விடுதியின் ஒரு பகுதியை நிர்மாணித்துக் கொடுக்கவும், தனது மனைவி கல்வி கற்ற சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் தேசிய பாடசாலை விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக காணியொன்றைக் கொள்வனவு செய்து கொடுக்கவும், சீனன் கோட்டை ஆரம்பப் பாடசாலையின் நூல் நிலையத்திற்கு உபகரணத் தொகுதியை பெற்றுக் கொடுக்கவும், மக்கொனை அல்-ஹஸனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் முதல் கட்ட நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து கொடுக்கவும், பேருவளை மரக்கலாவத்த (747 ஏ பிரிவு) கிராம சேவா வட்டாரத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் நிதியுதவி அளிக்க முஹம்மத் மிஷ்பாக் உறுதியளித்துள்ளார்.


மேற்படி வேலைத்திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாக ஆராயும் கூட்டமும் உறுதி மொழிகளை நிறைவேற்றுவது தொடர்பான கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வும் சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் தேசிய பாடசாலை கணினிக் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், முஹம்மத் மிஷ்பாக்கின் குடும்ப உறுப்பினர்கள் நிகழ்வில் பங்குபற்றினர்.


முஹம்மத் மிஷ்பாக் இங்கு உரையாற்றும் போது கூறியதாவது - அபுதாபியில் பல வருட காலமாக பணியாற்றி வருகிறேன். அபுதாபி பிக் டிக்கெட்  சீட்டிலுப்பின் மூலம் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். 


இது எனக்கு மட்டும் உரியதல்ல. என்னுடன் 19 பேர் பங்காளர்களாக இருந்தனர். எனக்குக் கிடைத்த பணத் தொகையை பொதுப் பணிக்காக செலவு செய்ய குடும்பத்தாருடன் சேர்ந்து முடிவெடுத்தேன். 


எதிர்காலத்திலும் எனது சம்பளம் மூலமும் முடியுமான நற்பணிகளை செய்வேன் என்றார்.


பாடசாலை அபிவிருத்திச் சங்க உபதலைவரும் சீனன் கோட்டை பள்ளி சங்க இணைப் பொருளாளருமான எம். இஸட். எம். ஸவாஹிர் ஹாஜியார் உரையாற்றும்போது, சீனன் கோட்டையில் உள்ள மூன்று பாடசாலைகளும் அல்லாஹ்வின் அருளால் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. கல்வித்துறை முன்னேற்றம் மூலம் சிறந்த பெறுபேறுகள் கிடைத்து வருகின்றன. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரதும் நலன் விரும்பிகளின் கடுமையான உழைப்பும் ஊர் மக்களின் முழுமையான பங்களிப்பும் அதிபர் ஆசிரியர்களின் தியாக மிகு சேவையுமே இந்த முன்னேற்றத்திற்குக் காரணமாகும். மேல் மாகாணத்தில் சுத்தமான, அழகான பாடசாலைகளாக மூன்று பாடசாலைகளும் திகழ்கின்றன. கல்விக்காக வாரி வழங்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் எமது ஊரில் உள்ளனர்.


கொரோனா காலத்தில் கூட நளீம் ஹாஜியார் மகளிர் தேசிய பாடசாலைக்கு மைதானம் அமைக்க 3 கோடி ரூபாவை காணிக் கொள்வனவுக்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் சேகரித்தனர். தியாகத்துடன் உழைக்கக்கூடிய சிறந்ததொரு குழு பாடசாலைக்குக் கிடைத்துள்ளது. ஊரில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கும் தனக்குக் கிடைத்த நிதியைக் கொண்டு பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முன்வந்த முஹம்மத் மிஷ்பாக்கை பாராட்ட வேண்டும் என்றார்.


பெருகமலை தாக்கிரீன் பள்ளிவாசல் நிர்வாகக் குழு செயலாளர் அஷ்ஷெய்க் மக்கி மன்ஸுர் ஆலிம் (நளீமி) நிகழ்ச்சியை நெறிப்படுத்தியதோடு மக்கொனை அல்-ஹஸனியா மகா வித்தியாலயத்தின் சார்பில் எம்.ரி.எம். ஹாரிஸ் ஹாஜியார், பெருகமலை மக்கள் சார்பில் எஸ்.ஐ.எம். புர்ஹான் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »