Our Feeds


Sunday, October 10, 2021

ShortNews Admin

கல்முனை மாநகர சபையில் ஊழலா? ஆதாரங்களை முன்வைத்தால் சட்ட நடவடிக்கை - மாநகர முதல்வர் அதிரடி



(அஸ்லம் எஸ்.மௌலானா)


கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், அதற்கான ஆதாரங்களை முன்வைத்து, நிரூபிப்பாரானால் அந்த அதிகாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி அதற்கான தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கு, தான் தயாராகவிருப்பதாக மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது பிரதேசம் புறக்கணிக்கப்படுவதாக ஜெமீல் தெரிவிக்கும் குற்றச்சாட்டை தான் அடியோடு மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஏ.எம்.றகீப் இன்று (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளரும் கணக்காளரும் ஊழல் செய்வதாகவும் கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருதுக்கு எவ்வித சேவைகளும் வழங்கப்படுவதில்லை என்றும் இந்தப் புறக்கணிப்பினால்தான் சாய்ந்தமருது தனியான நகர சபைக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஊடகமொன்றில் கூறியிருக்கிறார்.

கல்முனை மாநகர சபையில் ஊழல் இடம்பெறுமாயின் அதற்கான ஆதாரங்களோடு சகோதரர் ஜெமீல் அதனை நிரூபித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, அவர்களுக்கு எந்தத் தணடனையையும் பெற்றுக் கொடுப்பதற்கு மேயராகிய நான் தயாராகவே உள்ளேன்.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவு உள்ளிட்ட அனைத்து நிதி சம்மந்தப்பட்ட விடயங்களும் தற்போது கணனிமயப்படுத்தப்படுத்தப்படடள்ளன. ஒரு 10 ரூபாவையேனும் எவராலும் கையாடல் செய்ய முடியாதவாறே தற்போது எமது மாநகர சபையின் நிதிக்கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், கல்முனை மாநகர சபையின் சேவை வழங்கலை பொறுத்தவரையில் ஏனைய ஊர்களைப் போன்றே, சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் உரிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த காலங்களை விட எனது ஆட்சி நிர்வாகத்தில் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் திண்மக்கழிவகற்றல் சேவையை சாய்ந்தமருது பிரதேசத்திலும் எவ்வித குறையுமில்லாமல், மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறோம்.

அவ்வாறே, தெரு விளக்கு பராமரிப்பு சேவையும் இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு இரவு பகலாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் இரவு நேரத்தில் கூட உரிய இடத்திற்கு சென்று, திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வடிகான் பராமரிப்பு பணியையும் கிரமமாக மேற்கொண்டு வருகின்றோம்.

ஒரு மாநகர சபையினால் ஒரு பிரதேசத்துக்கு  எந்தெந்த சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமோ அவை அனைத்தும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் எவ்வித குறைபாடுமின்றி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை நான் ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகிறேன்.

இந்நிலையில், கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது புறக்கணிக்கப்படுகிறது என்ற ஜெமீலின் குற்றச்சாட்டு குறித்து நான் மிகவும் வருத்தமடைகின்றேன். சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை என்பது நான் முதலவாரான பின்னர் உருவான கோஷமல்ல என்பதும் அது மிக நீண்ட காலமாக இருந்து வந்த கோஷம் என்பதையும் எல்லோரும் அறிவார்கள்- என மேயர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »