Our Feeds


Saturday, November 6, 2021

ShortNews Admin

கொரோனாவுக்கு மத்தியில் 4 நாட்களில் 505 பேர் டெங்கு நோயால் பாதிப்பு



நாட்டில் ஜனவரி முதல் நேற்று முன்தினம் (04) வரையான காலப்பகுதியில் 22,902 டெங்கு காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் நோயாளிகள் பதிவாகியிருந்ததாகவும் அவர்களில் 2,979 பேர் ஒக்டோபர் மாதத்திலும், மேலும் 505 பேர் நவம்பர் மாத முதல் நான்கு நாட்களில் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு நேற்று (05) தெரிவித்தது.


இது தொடர்பில் அப்பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நுளம்புப் பரவுகைக் கண்காணிப்பு நடவடிக்கையின் பிரகாரம், நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமை டெங்கு நோயின் சடுதியான அதிகரிப்பு நிலையாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவுசெய்யப்பட்ட 59 அதிக டெங்கு ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நவம்பர் 8ஆம் திகதிமுதல் 13ஆம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. .

இந்த நிகழ்ச்சியின்போது, கள சுகாதார பணியாளர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அடங்கிய குழுக்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று, வீடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களை அகற்றுவது குறித்து வீடுகளில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். அதேநேரம், வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நுளம்புகள் உற்பத்தியாகாத சூழலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.கொவிட் 19 தொற்றுநோய் இன்னும் நிலவி வருவதால், இந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும் குழுக்களுக்கு வீட்டில் உள்ளவர்களையும் தங்களையும் கொவிட் பரவுகையிலிருந்து பாதுகாக்கும் அதேவேளை, வீடுகளை எவ்வாறு பாதுகாப்பான முறையில் சோதனை செய்வது என்பது குறித்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். நவம்பர் 3ஆம் திகதியன்று, சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், பொலிஸ், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், இத்திட்டத்தை எவ்வாறு வெற்றியடையச்செய்வது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

கொவிட்19 உலகளாவிய தொற்று நோயிலிருந்து நாம் மெதுவாக மீண்டுவரும் இவ்வேளையில் டெங்கு தொற்றுநோயின் பாதகமான விளைவுகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும். எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். திட்டமிடப்பட்டுள்ள விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவை சுகாதார அமைச்சு கோருகிறது. வீடுகளுக்குச் செல்லும் குழுக்கள் அன்புடன் வரவேற்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »