Our Feeds


Monday, November 8, 2021

SHAHNI RAMEES

கோட்டாபய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.


கோட்டாபய அரசினை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊரிலிருந்து தொடங்குவோம் என்னும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசாங்கமானது மக்களை ஏமாற்றும் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பாக இராணுவத்தைப் பயன்படுத்தி சேதன விவசாயத்தை துப்பாக்கி வலுக்கட்டாயமாக தான் முன்னெடுப்பேன் என ஜனாதிபதி தெரிவிக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அராஜகம் காணப்படுகின்றது.

மேலும் இந்த நாட்டில் தற்போது பால்மா எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் இந்த கோட்டாபய அரசாங்கமானது தனது குடும்ப ஆட்சியை மேன்மேலும் அதிகரித்து இந்த நாட்டில் அராஜகம் புரிந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் ஒரு கோடி மக்கள் விவசாயிகளாக உள்ள நிலையில் ஒரு நெற்கதிர் என்றால் என்ன என்று தெரியாத ஜனாதிபதி தான் தற்போது விவசாய புரட்சி ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார்.

விவசாயப் பெருமக்களுடன் கலந்துரையாடி தான் சில முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் விவசாயியல்லாத விவசாயத் துறையை பற்றி தெரியாத ஒருவர் நாட்டில் விவசாயத் துறையினை மேம்படுத்துவதற்குரிய தீர்மானங்களை எடுப்பது ஒரு வியப்பான விடயமாகும்.

எதிர்வரும் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றி நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மக்கள் விடுதலை முன்ணணியின் "ஊரிலிருந்து தொடங்குவோம்" என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடலும் தூண்டுபிரசுர விநியோகமும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்னாயக்க, அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த செயற்றிட்டமானது மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »