தாம் தொடர்ந்தும் எதிர்கட்சியில் இருந்தவாறே, அரசியலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தாம் வேறு கட்சி எனவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சி செய்ததாகவும் அவர் கூறுகின்றார்.
எனினும், தமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர், எதிர்வரும் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க போவதில்லையா? என கேள்வி எழுப்பினார்.
தான் அவ்வாறு கூறவில்லை என ரிஷாட் பதியூதீன் பதிலளித்தார்.
தான் விளக்கமறியலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் இவ்வாறான கேள்வியொன்று எழுப்பும் போது, தாம் கூட்டணி அமைக்கவில்லை என அவர் பதிலளித்தார் என ரிஷாட் பதியூதீன் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் தாம் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து, எதிர்கட்சியின் கடமைகளையே முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.