Our Feeds


Sunday, November 21, 2021

ShortNews Admin

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம்: இந்த வழக்கை இழுத்துச் செல்ல தான் விரும்பவில்லை என திறந்த நீதிமன்றில் தெரிவித்த நீதிபதி!



(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என குறிப்பிட்டே இவ்வழக்கை விசாரிக்கவென விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்து பிணை குறித்த தனது தீர்மானத்தை அறிவித்தார்.

அதன்படி இந்த வழக்கானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி சாட்சி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் வழக்கின் முதல் சாட்சியாளரை நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது. அத்துடன் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவரையும் நீதிமன்றில் கண்டிப்பாக ஆஜர் செய்யுமாறு நீதிபதி குமாரி அபேரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு விசேட உத்தரவைப் பிறப்பித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுகளின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பகிர்வுப் பத்திரம் மீதான வழக்கு விசாரணை மீளவும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரிக்கவென விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், முதலில் கடந்த தவணையின்போது அறிவித்ததற்கு அமைய, நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகளின் பிணைக் கோரிக்கை தொடர்பிலான தனது தீர்மானத்தை அறிவித்தார்.

‘ முதலாம், இரண்டாம் பிரதிவாதிகளுக்கு பிணையளிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பயங்கரவாத தடைச் அட்டத்தின் 7 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் பிரதிவாதிகள் விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குடியகல்வு குடிவரவு சட்டத்தின் 48 (1) ஆம் பிரிவை ஒத்த நிலைமையை அது கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 48 (1) ஆம் அத்தியாயமானது அரசியலமைப்பின் 13 (2) ஆம் உறுப்புரிமையை மீறுவதாக உயர் நீதிமன்றின் திலங்க சுமதிபால, குமாரதாச உள்ளிட்ட வழக்குகளின் தீர்ப்புக்களுடன் ஒப்பீடு செய்து பிணைக்கோரி பிரதிவாதிகள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா, பிரதிவாதிகள் பயங்கர்வாத தடை சட்டத்தின் 15 (2) ஆம் அத்தியாயத்தின் கீழேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 (7) ஆம் அத்தியாயம் செல்லாது எனவும் வாதங்களை முன்வைத்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் 7 ( 2) ஆம் அத்தியாயமானது, ஒருவர் சந்தேக நபராக இருக்கும் சூழலில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்ப்ட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிப்பதற்கான ஏற்பாடாகும். இவ்வழக்கில் பிரதிவாதிகளான இந்த இருவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 15 (20 ஆம் பிரிவின் கீழேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவே வழக்குத் தொடுநரின் நிலைப்பாடாகும்.

இந்த நிலைப்பாட்டை நீதிமன்றமும் ஏர்றுக்கொள்கிறது. ஏனெனில், பிரதிவாதிகள் இருவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் 15 ( 2) ஆம் பிரிவின் கீழேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 48 (10 ஆம் அத்தியாயத்துடன் தொடர்புடைய சட்ட வியாக்கியானத்தை வெளிப்படுத்தும் உயர் நீதிமன்றின் தீர்ப்புக்கள் இந்த பிரிவுடன் தொடர்பற்றது.

எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 7 (2), 15 (2) ஆகிய அத்தியாயங்கள் ஒரே வகையான நிலைமையை பிரதிப்பலிக்கின்றன. அவை இரண்டும் அரசியலமைப்பின் 13 (2) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றன, எனும் கோணத்தில் இந்த விடயம் அணுகப்பட்டது.

ஏதேனும் சட்டம் ஒன்று அரசியலமைப்புடன் முரண்பட்டால் அது தொடர்பில் உயர் நீதிமன்றஹ்துக்கே தீர்மானமெடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த நீதிமன்றம் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றுக்கு அமைய வழக்கு விசாரணை செய்யும் ஆரம்ப நிலை நீதிமன்ரம் மட்டுமே. சட்ட வியாக்கியானம் வழங்க இந்த நீதிமன்றால் முடியாது.

அத்துடன், பயங்கர்வாத தடைச் சட்டத்தின் 28 ஆவது அத்தியாயத்துக்கு அமைய அச்சட்டம் எல்லா எழுத்துமூல சட்டங்களுக்கும் மேலாக செயற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இச்சட்ட ஏற்பாடுகளை குடிவரவு குடியகல்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒப்பீடு செய்ய முடியாது.

எனவே பிரதிவாதிகளுக்கு பிணையளிக்க இந்த நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவர்களின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.’ என மேல் நீதிமன்ற நீதிபதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறிவித்தார்.

இதனையடுத்து பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், கனேஷ யோகன், நிரான் அங்கிடெல் உள்ளிட்டவர்களுடன் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதி செய்வதற்காக, பிரதிவாதிக்கு தன்பக்க நியாயங்களை முன்வைக்க தேவையான சான்றாவணங்கள் பலவற்றைக் கோரி வாதங்களை முன்வைத்தார்.
சட்டத்தரணி ஹபீல் பாரிஸும் இதன்போது அது தொடர்பில் விளக்கங்களை நீதிமன்றுக்கு வழங்கினார்.

தம் பக்க நியாயங்களை முன்வைக்க, குறிப்பாக வழக்கின் சாட்சியாளர்களான மலிக் மற்றும், பெளசான் ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் வழங்கியிருப்பின் அதன் பிரதிகள், ரிஐடி., சிசிடி. ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வழக்குடன் தொடர்புபட்டு முன்னெடுத்த இருவேறு விசாரணைகள் தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பிரதானமாக கோரினர்.
எனினும் அவற்றை வழங்க முடியாது என சட்ட மா அதிபர் மறுப்பு தெரிவித்தார்.

பிரதிவாதிகள்கோரும் சான்றாவணங்கள் பல, இந்த வழக்குடன் நேரடியாக தொடர்புபட்டதல்ல எனவும், அத்துடன் பிரதிவாதிகளுக்கு எதிராக இடம்பெறும் வேறு விசாரணைகலுடன் தொடர்புடையது என்பதாலும் அவற்றை வழங்க முடியாது என வழக்குத் தொடுநர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா குறிப்பிட்டார்.

இதன்போது, தமது பக்க நியாயங்களை முன்வைக்க தேவையான சான்றாவணங்களைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றின் உத்தரவைப் பெறும் நோக்கில் , பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள வாதங்களை முன்வைத்தார்.

அதற்கு பதில் வாதங்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா முன்வைத்தார்.

இந்நிலையில், இருபக்க வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, பிரதிவாதிகள்கோரும் சான்றாவணங்களை வழங்க நீதிமன்ற உத்தரவை பிறப்பிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 2022 ஜனவரி 7 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தது.

இதனைவிட, இருதரப்பும் இணைந்து ஒன்றிணைந்த நகர்த்தல் பத்திரம் ஊடாக, வழக்குத் தொடுநரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சான்றாவணங்கள், மேலும் எதிர்ப்பார்க்கப்படும் ஆவணங்கள் தொடர்பிலான பூரண விடயங்களை உள்ளடக்கிய விபர அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இருதரப்புக்கும் அறிவித்தது.

இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 2022 ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் சாட்சி விசாரணைகளை ஆரம்பிப்பதாக அறிவித்ததுடன், முதல் சாட்சியாளருக்கு அன்றைய தினம் சாட்சியம் வழங்க நீதிமன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பியது.

இந்த வழக்கு விசாரணைகளிடையே திறந்த நீதிமன்றில் கருத்து வெளியிட்ட நீதிபதி குமாரி அபேரத்ன, இந்த வழக்கை நான் இழுத்துச் செல்ல விரும்பவில்லை. இவ்வழக்கை எதிர்வரும் ஜனவரி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்து முடிக்கவே நான் எதிர்ப்பார்க்கிறேன். என தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »