Our Feeds


Thursday, November 18, 2021

SHAHNI RAMEES

புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருப்போர் நாடு திரும்ப ஏற்பாடு - அமைச்சர் டக்ளஸ்

 

யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருப்போர் விரும்புகின்றபோது நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும்   கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில்தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மாகாணத்திற்கான நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்தித் திட்டம், கடற்றொழில் துறைமுக அபிவிருத்திகள், நீர்வள ஊக்கம்,கடன் திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பு, பலநாட்கலங்களுக்கான வழித்தட கண்காணிப்புக் கருவிகள், கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகளில் ஈடுபடுகின்ற மக்களின் வாழ்வியலை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காணி அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி மானியத்தில், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக காணி இழப்புகள் ஏற்படுகின்றவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதென்பது நல்லதொரு திட்டமாக அமைகின்றது.

காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றை விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது பகுதிகளிலே நீண்டகால இடப்பெயர்வுகள் காரணமாக பயன்பாட்டு நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் என்பன காடுமண்டிக் காணப்படுகின்றன. 

அத்தகைய நிலங்கள் வன இலாக்கா அல்லது வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களாக கணிக்கப்பெற்று வருகின்றன. அந்த நிலங்களில் எமது மக்கள் யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் பல்வேறு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

எனவே, அவ்வாறு இனங்காணப்படுகின்ற நிலங்களில், சூழல் மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மண் வேளாண்மை மற்றும் நீர்வேளாண்மை செய்கைகளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்திற்கான அண்மைய விஜயத்தின்போது, பல்வேறு கடற்கரையோர பகுதிகள் கடலரிப்புக்கு உட்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அப்பகுதிகளில் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் மீளக்குடியேறாமல் இருந்து வருகின்ற குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கென 1,259 மில்லியன் ரூபாவும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் 1,200 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், யாழ் நகர சபைக் கட்டிட நிர்மாணிப்பிற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு திரும்ப விரும்புகின்றவர்களுக்கும் மீள்குடியேற்றத்திற்கான வசதிகளை வழங்க முடியும். நாட்டிற்கு வரவிரும்புகின்றவர்களை அழைத்து வருவதற்கான ஒழுங்கு முறைகள் தொடர்பாக இந்திய இராஜதந்திர தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகின்றேன் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »