மனித உரிமை மீறல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளமுடியாது என்றும் எனவே அமெரிக்காவைப்போன்று இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடையை விதிக்குமாறும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக 'மெக்னிற்ஸ்கி' முறையிலான தடையை விதிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களான எலியற் கொல்பேர்ன் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகிய இருவரும் பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியுள்ளனர்.
அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடைவிதிக்கமுடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கமுடியும்.
இந்நிலையில் குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தின் 58 ஆவது படையணியின் கட்டளைத்தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா மீதான நம்பத்தகுந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களின் விளைவாக அவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.
எனவே இவ்விடயத்தில் அமெரிக்காவைப் பின்பற்றிச் செயற்படவேண்டியது அவசியமாகும் என்று அவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
'சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனும் அதனைப் பின்பற்றிச் செயற்படவேண்டிய தருணம் இதுவாகும்.
அதன்மூலம் நாம் மனித உரிமை மீறல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ளமாட்டோம் என்பதை வெளிக்காட்டவேண்டும்' என்று தெரேஸா வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்திருந்தார்.
மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் வழங்கவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.
இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும் என்று சாரா ஜோன்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.