Our Feeds


Saturday, November 27, 2021

SHAHNI RAMEES

மைத்ரி அணி வெளியேறலாம்- அமைச்சர் பிரசன்ன பகிரங்க அறிவிப்பு

 

அரசாங்கத்தில் இருக்க முடியாதவர்கள், உள்ளுக்குள் இருந்து அனைத்து சலுகை களையும் பெற்றுக்கொண்டு பொய் கூச்ச லிடாமல் வெளியேறிவிட

வேண்டும். எங்களுக்கு ஆட்சியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. அரசாங்கத்தை விட்டு வெளியில் செல்வோர் அவ்வாறு சென்றாலும் எங்களால் அரசாங் கத்தை கொண்டுநடத்த முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான நீர் வசதிகளை மேம்படுத்தும் வகையில் யக்கலை வீதியாவத்தை பிரதேசத்தில் நீர்த்தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று (26) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது எனக்கு கோபம் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் எங்களின் ஆரம்பம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அந்த கெளரவத்தை வழங்குவோம். ஆனால், கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்தியவர்களுடன் எமக்கு பிரச்சினை உள்ளது.

அதனாலேயே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த ஒருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று கூறினேன். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே கட்சியை அழித்தார். இன்று இந்த அரசாங்கத்தையும் அழிக்க முயற்சிக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதியே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே நான் எப்போதும் பேசுவேன். அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி உறுப்பினர்கள் பொதுவெளியில் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், தொடர்ந்தும் அமைதியாக இருக்கமுடியாது. அதற்கு பதிலளிக்கும்போது சிலருக்கு வலிக்கும். அவ்வாறு வலிக்கும்போது, அவர்கள் சொல்வதை விட அதிகமாக எங்களுக்கும் செல்லவேண்டிவரும்.

ஆகவே, நான் எப்போதும் என் கருத்தை வெளிப்படையாகக் கூறும் ஒருவன். அரசாங்கம் வலுவாக முன்னோக்கிச்செல்ல வேண்டுமானால், நேரடியான முடிவுகளை எடுக்கவேண்டும்.

அரசாங்கத்தில் இருக்கமுடியாதவர்கள், அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு பொய் கூச்சலிடாமல் வெளியே செல்லவேண்டும். அல்லது கூட்டுப்பொறுப்பை பாதுகாத்துக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். ஆட்சியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக்கொண்டு அரசாங்கத்தை கொண்டு சென்றார். அரசாங்கத்தைவிட்டு வெளியில் செல்வோர் வெளியே சென்றாலும் எங்களால் அரசாங்கத்தை எடுத்துச்செல்ல முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »