Our Feeds


Friday, November 12, 2021

Anonymous

ஸஹ்ரானின் பயங்கரவாதம், கொரோனா பரவல் நிலையினால் தீர்வின்றி அலைக்கழிக்கப்படுகிறோம்.

 



பாறுக் ஷிஹான்


சஹ்ரான் பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சினையால் தாம் பல மாதங்களாக எவ்விதத் தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படுவதாகவும் தமக்கு   நீதியை பெற்றுத் தாருமாறும் வெளி மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 26 பேர் கொண்ட அவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்முனை ஊடக மையத்தில் நேற்று (11) நடத்திய ஊடகவியலாளரர் சந்திப்பில் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.


அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது, “கடந்த அரசாங்கத்தில் 18 ஆயிரம் பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துகொள்ளப்பட்டோம். இதில் நாங்கள் 26 பேர் வெளி மாகாணங்களுக்கு வேலைக்கு சென்று மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.


“வெளிமாகாணத்தில் உள்ள எமது பிரதேச செயலகங்கள் எம்மை விடுவித்தும் கூட தொடர்ந்து அங்கு பணியாற்றுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் நாமும் எமது பிள்ளைகளும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.


“தமிழ் மொழியில் தான் எமது பட்டதாரி பயிற்சி காலத்தையும் மேற்கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் தற்போது கடமைக்காக அனுப்பப்பட்டுள்ள சில பிரதேச செயலகங்களில் தமிழ் பேசுவதற்கு கூட யாரும் இல்லை. எமது பிரச்சினையை கூட கூற முடியாத நிலைமையில் நாம் இருக்கின்றோம். சிங்கள மொழி தெரியாது திணறுகின்றோம்.


“தற்போது வாழ்க்கை செலவு என்பதும் பெரும் சுமையாக காணப்படுகின்றது. நாம் ஒரு மாகாணங்களிலும் எங்களது மனைவிமார் மற்றுமொரு மாகாணத்திலும் தொழில் செய்கின்றனர்.


“இதனால் எமது பிள்ளைகளின் படிப்பு உட்பட அனைத்து விடயங்களும் பாதிக்கப்படுகின்றன.


“எனவே, அனைத்து தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எமக்காக முன்னின்று தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டனர்.


இவர்கள் அனைவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளாக இருந்து தற்போது அபிவிருத்தி உத்தியோர்களாக 01.01.2021 அன்று  நிரந்திர நியமனம் பெற்றுள்ளனர்.


பின்னர்  22.04.2021 அன்று  பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டு, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை போன்ற வெளி மாகாணத்தில் உள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்மை சுட்டிக்காட்டத்தக்கது.


இந்தப் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் குறித்து எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை குரல்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »