மசகு எண்ணெய் இல்லாமையினால், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
மசகு எண்ணெய் இல்லாமையினால், வரலாற்றில் முதல் தடவையாக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் நாளை மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, இது குறித்து தெளிவூட்டுவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மசகு எண்ணெயுடனான கப்பல் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்திலேயே நாட்டிற்கு வருகைத் தரவுள்ளமையினால், அது வரை சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக்க ரன்வல தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நாட்டிற்கு வருகைத் தரவுள்ள கப்பலில் 90000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கொண்டு வரப்படவுள்ளதாகவும், அது 15 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் நடுப்பகுதியிலேயே மற்றுமொரு கப்பல் வருகைத் தரவுள்ளதாக அறிய முடிகின்றது.
நாட்டில் இதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
நாட்டின் கேள்விக்கு தேவையான எரிபொருள் நாட்டின் உள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அதற்கு முன்னரே தான் நாட்டிற்கு அறிவிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.