Our Feeds


Thursday, November 25, 2021

ShortNews Admin

தடை செய்யப்பட்டுள்ள CTJ அமைப்பின் செயலாளராக செயல்பட்ட அப்துர் ராசிகுக்கு மேல் நீதிமன்றில் பிணை



(எம்.எப்.எம் பஸீர்)

தடை செய்யப்பட்டுள்ள சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்ட அப்துர் ராசிக் மீது மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டுள்ள மதநிந்தனை வழக்கில் 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் மற்றும் 10 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது. 


மதநிந்தனை குற்றச்சாட்டு தொடர்பில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள சிலோன் தெளஹீத் ஜமாஅத் அமைப்பின்  பொதுச் செயலாளராக செயல்பட்ட அப்துர் ராசிக்குக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


எச்.சி.2973/21 எனும் குறித்த வழக்கில் அப்துர் ராசிக்குக்கு மேலதிகமாக  ரஹ்மதுல்லாஹ் மொஹம்மட் ரியாஸ், மெக்பா அமீர் மொஹம்மட் தெளசீப் அஹமட் ஆகியோரும் பிரதி வாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.


2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3(1),3(3) ஆம் உறுப்புரைகள்,  தண்டனை சட்டக் கோவையின் 291 (ஆ) அத்தியாயம் ஆகியவற்றின் கீழ், குறித்த மூவருக்கும் எதிராக 6 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.


குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 3 சான்றுப் பொருட்களும், 9 சாட்சியாளர்களின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளதுடன், பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற 6 ஆம் இலக்க விசாரணை அறையில் வைத்து  கடந்த 22ம் திகதி திங்களன்று குற்றப் பத்திரிகையும் கையளிக்கப்பட்டது.


இதன்போது அப்துல் ராசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும்  மன்றில் ஆஜரான நிலையில், அவர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.


மூன்று பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்குமாறு சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மன்றில் கோரிக்கை வைத்த நிலையில் அப்துர் ராசிக் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.


அத்துடன் பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு தினங்களில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.


அதன்படி இந்த வழக்கானது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக எதிர்வரும்  2022 ஜனவரி 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »