Our Feeds


Saturday, November 13, 2021

SHAHNI RAMEES

JDB நிறுவன நிர்வாகம் உடன் பதவி விலக வேண்டும் – செந்தில் தொண்டமான்

 


தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தை குறிப்பிட்ட திகதியில் வழங்காமல், நிதி பற்றாக்குறை என அரசின் கீழ் இயங்கும் JDB நிறுவனம் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என்று இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் செய்த வேலைக்கான சம்பளம், இந்த மாதம் 10ம் திகதிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், அதை விடுத்து JDB நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிதி பற்றாக்குறை என கூறி சம்பளத்தை JDB நிறுவனம் இன்னும் வழங்கவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டதக்கது.

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்திற்கு பொறுப்பு கூற வேண்டிய முக்கிய அதிகாரிகள் கவனம் செலுத்தாது அலட்சிய போக்கில் உள்ளனர்.

அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது.

நாட்டில் அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் குறிப்பிட்ட திகதியில் சரியான முறையில் வழங்கப்படுகிறது. ஆனால் அரசின் கீழ் இயங்கும் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் சம்பளம் குறிப்பிட்ட திகதியில் வழங்கப்படாமை என்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில்,தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் மாதாந்த சம்பளத்தை அடிப்படையாக வைத்தே வாழ்க்கை செலவை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் JDB யின் இந்த செயற்பாடு முற்றிலும் கண்டிக்கதக்கது.

தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் கஷ்டப்பட்டு வேலை செய்து வருகின்றனர். அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான திகதியில் ஊதியம் வழங்காது, சம்பளத்தை தாமதிப்பது என்பது அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

தோட்ட தொழிலாளர்கள் அவர்கள் கடந்த மாதத்தில் செய்த வேலைக்கான சம்பளத்தை தான் குறிப்பிட்ட திகதியில் கேட்கிறார்களே தவிர, அவர்கள் வேலை செய்ய போகும் மாதத்திற்கான சம்பளத்தை அல்ல.

தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்குவதில் அக்கறை காட்டும் JDB ,தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்துவதில் அசமந்த போக்கில் உள்ளது.

எனவே தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை தாமதமின்றி குறிப்பிட்ட திகதியில் JDB நிறுவனம் கண்டிப்பாக வழங்க வேண்டும். வழங்க தவறும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் தலைவர்,இயக்குனர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இது தொடர்பாக தொழில் அமைச்சின் கவனத்திற்கு செந்தில் தொண்டமான் அவர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது..

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »