இலங்கை பிரஜையான பிரியந்த குமார பாகிஸ்தான் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை கண்டன தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.
தீர்மானத்தின் நகலை குமாரவின் குடும்பத்தினருக்கு வழங்கவும், இரங்கல் தெரிவிக்கவும் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மேல்சபை செனட்டர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பும் என்று செனட் தலைவர் சாதிக் சஞ்சரானி அறிவித்தார்.
சபைத் தலைவர் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
அதேநேரம், நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் மத நிந்தனை தொடர்பான சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல செனட்டர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.
பிரியந்த குமார பாகிஸ்தானில் 11 வருடங்கள் வசித்து தொழில் புரிந்து வந்தார். இந் நிலையில் மதம் சார்ந்த உள்ளடக்கம் கொண்ட சுவரொட்டியை அகற்றியதற்காக அவர் மீது அவதூறு குற்றம் சாட்டப்பட்டு, வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
எனினும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் குமார மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை பின்னர் தெரியவந்தது.