Our Feeds


Saturday, January 8, 2022

SHAHNI RAMEES

குசல், திக்வெல்ல, தனுஷ்கவின் போட்டித் தடை நீக்கம்

 



இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது கொவிட்-19 உயிர்க்குமிழி விதி மீறல் தொடர்பில் நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த  ஒரு வருட போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உடற் தகுதியின் அடிப்படையில் இலங்கையில் நடைபெறவுள்ள சிம்பாம்வே அணிக்கு எதிரான தொடரில் இம்மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த வருடம் நடுப்பகுதியில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த சுற்றுப்பயணத்தின் போது வெளியாகிய வீடியோ ஒன்றின் அடிப்படையில் அப்போதைய இலங்கை அணியில் இடம்பெற்ற தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகிய மூவருக்கும் கொவிட்-19 உயிர்ப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த மூன்று வீரர்களையும் விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த குழு வழங்கியிருந்த பரிந்துரைக்கு அமைய, தனுஷ்க குணதிலகவிற்கு இரண்டு வருட போட்டித்தடையும், நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு தலா ஒன்றரை வருட போட்டித்தடையும், மூவருக்கும் தலா 25,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என பரிந்துரை செய்திருந்தது.

எனினும் கடந்த ஜூன் தொடக்கம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இந்த வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் நிர்வாகம் ஆறு மாத காலம் உள்ளுர் போட்டிகளில் விளையாடுவதற்கான தடையினையும், ஒரு வருடத்திற்கான சர்வதேச போட்டித் தடையையும் வழங்கியதோடு, இரண்டு வருடங்களுக்கான ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையுடன் ரூபா. 10 மில்லியனை அபாரதமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தது.

இது தவிர இந்த வீரர்கள் மூவரும் இலங்கை கிரிக்கெட் சபை பரிந்துரைக்கும் வைத்தியர் ஒருவரிடம் கட்டாயமான உளநல ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »