உக்ரைன் சார்பில் குரலெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு 14 மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் உக்ரைன் மற்றும் சர்வதேச ரீதியிலான அமைதி, பாதுகாப்பிற்கு ஆதரவை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா தனது பகைமை உணர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதற்கு, தம்முடன் இணைந்துகொள்ளுமாறு இலங்கைக்கான 14 வெளிநாட்டுத் தூதுவர்கள் கூட்டறிக்கையூடாக இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக, உலக நாடுகளிலுள்ள தனது நண்பர்களுடன் இணைந்து செயற்படுமாறும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் உலக மக்களின் இறையாண்மைக்காக, உக்ரைனுடன் இணைந்திருப்பதாக தூதுவர்களின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகர், கனடாவிற்கான உயர்ஸ்தானிகர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து,நோர்வே, ஜப்பான், ருமேனியா, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் இணைந்தே கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மேலும், பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகரும் அமெரிக்காவிற்கான தூதுவரும் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
அமைதியான சூழலை ஏற்படுத்தும் வகையில், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண உக்ரைனும் ரஷ்யாவும் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்துவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை தீர்ப்பதற்கு, உலக நாடுகள் தலையிட வேண்டும் எனவும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தற்போதைய நிலைமையானது, இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் தேயிலை ஏற்றுமதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.