மாவனல்லை, பெமினிவத்தை பிரதேசத்தில் ஜனாஸா அடக்கத்தின்போது மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (26) பிற்பகல் மாவனல்லை, பெமினிவத்தை பிரதேச மையவாடியில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்கத்தை தொடர்ந்து, இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மாவனல்லை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இறுதிக்கிரியை நேரத்தில் அங்கு அருகிலிருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள், நின்ற இடத்திலேயே திடீரென மயங்கி வீழ்ந்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் 25 பேர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுஆரச்சி தெரிவித்தார்.
இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.