Our Feeds


Friday, March 18, 2022

SHAHNI RAMEES

டீசல் பற்றாக்குறையினால் 4,000 கொள்கலன் வாகனங்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்!

 

டீசல் தட்டுப்பாடு காரணமாக, கொள்கலன்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாகவும் இதுவரை நான்காயிரம் கனரக வாகனங்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கொள்கலன் வாகன உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சரத் மஞ்சுள தெரிவித்தார்.

நாட்டுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுகளையும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளதாகவும் தமது சங்கத்தினால் சுமார் இரண்டாயிரம் கனரக வாகனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து பஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகன சங்கங்களும் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

நாட்டுக்கு தேவையான எரிபொருள் உள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும் நாளாந்தம் எரிபொருள் நிலையங்கள் முன்பாக நீண்ட வாகன வரிசையே காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் நீண்ட வாகன வரிசைகளை அவதானிக்க முடிந்தது. டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாததன் காரணத்தினால் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கைகளைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நெருக்கடியை சமாளிக்க முடியாது மக்கள் பொறுமையிழக்கும் நிலைமையை இது வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே, இம்மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் நாட்டுக்கு தேவையான எரிபொருளுடன் 10 கப்பல்கள் இலங்கையை வந்தடையும். எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க மாட்டோம். புதுவருட காலத்தில் ஒருபோதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

நான்காயிரம் கொள்கலன் வாகனங்கள் சேவையிலிருந்து நிறுத்தம்!
டீசல் தட்டுப்பாடு காரணமாக கொள்கலன்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாகவும், தற்போது வரையில் நான்காயிரம் கொள்கலன் வாகனங்களை பயன்படுத்தாதுள்ளதாகவும் கொள்கலன் வாகன உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சரத் மஞ்சுள தெரிவித்தார்.

நாட்டுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுகளையும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளதாகவும் தமது சங்கத்தினால் சுமார் இரண்டாயிரம் கனரக வாகனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுப்போக்குவரத்தும் பாதிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் முறையாக வழங்காத காரணத்தினால் நேற்று முன்தினம் தனியார் பஸ்களும் மட்டுப்படுத்தப்பட்டே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அதற்கமைய நாடு பூராகவும் 4,500 பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். நேற்றும் அவ்வாறான நிலைமையே காணப்பட்டதாக கூறிய அவர், இன்றைய தினமும் டீசல் தட்டுப்பாடு நிலைமைகள் தொடர்ந்தால் தனியார் போக்குவரத்து சேவைகளை நிறுத்த வேண்டி வரும் என்றார்.

எரிவாயு கிடைக்கப்பெற்றாலும் உணவகங்கள் பாரிய நெருக்கடியில்

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதில் பாரிய தட்டுப்பாடு காணப்படுவதன் காரணத்தினால் உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எரிவாயு இறக்குமதி செய்யப்படுவதாக கூறினாலும் உணவகங்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். அரசாங்கம் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்தியாக வேண்டும் இல்லையேல் உணவகங்களில் பணிபுரியும் சுமார் ஐந்து இலட்சம் ஊழியர்கள் வீதிக்கு இறங்க வேண்டிவரும் என்றார்.



எனினும் கடந்த சில நாட்களாக நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இருந்ததாகவும் நேற்று தொடக்கம் தேவையான எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கும்

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நிலக்கரி கொள்வனவு செய்யுமளவுக்கு நாட்டில் டொலர் இல்லாத காரணத்தினால் நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும், எனவே மின் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆடைகளின் விலை 50 வீதத்தினால் அதிகரிக்கும்

டொலர் தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு காரணமாக புதுவருட காலத்தில் ஆடைகளின் விளையும் 50 சத வீதத்தினால் அதிகரிக்கும் என அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிரூக்ஷ குமார தெரிவித்துள்ளார். டொலருக்கான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இப்போதே ஆடை, துணிகளின் விலை 35 சத வீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில் புதுவருட காலத்தில் 50 சத வீதத்தினால் தேசிய ஆடைகளின் விலையை அதிகரிக்க நேரிடும் எனவும், இந்த புதுவருடம் மக்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் எனவும் அவர் கூறினார்.

மருந்து விலை அதிகரிப்பு – தனியார் வைத்தியசாலைகளின் சேவை கட்டணம் மற்றும் பரிசோதனை கட்டணம் அதிகரிப்பு

நாட்டில் ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரச வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மருந்துகளின் விலை 29 சத வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதனால் அதுவும் மருந்து தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட காரணமாக அமையும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீந்த சொய்ஸா தெரிவித்தார். அதேபோல் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் சேவை கட்டணமும் அதேபோல் பரிசோதனை கட்டணமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »