மகாசங்கத்தினரது ஆலோசனைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படுமாயின் இனிவரும் காலங்களில் அரசாங்கம் மகாசங்கத்தினரது ஒத்துழைப்பை பெற முடியாது.
சிறந்த ஆலோசனைகளுக்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மதிப்பளிப்பதில்லை ஆகவே அவர் தொடர்பில் கருத்துரைக்க முற்றிலும் விரும்பவில்லை என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலைமையில் அரசியல் நெருக்கடியும் தற்போது தீவிரமடைந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னின்று செயற்பட்ட விமல் வீரவன்ச,உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியமை முற்றிலும் தவறானது.
நாட்டு மக்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனநிலையை எம்மால் நன்கு உணர முடிகிறது.
பாரியளவிலான அபிவிருத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்தி மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம்.
இருப்பினும் எமது ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிறந்த ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பதில்லை ஆகவே அவர் தொடர்பில் கருத்துரைக்க முற்றிலும் விரும்பவில்லை.
சிறந்த பதிலை நாட்டு மக்கள் வெகுவிரைவில் வழங்குவார்கள்.
அரசாங்கம் மக்களின் வெறுப்பை பெற்றுக்கொண்டால் அது அரசாங்கத்தின் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையினை அரசாங்கம் மீட்டிப்பார்க்க வேண்டும்.
மகாசங்கத்தினரது ஆலோசனைக்கு புறம்பாக செயற்படுமாயின் இனிவரும் காலங்களில் அரசாங்கம் மகாசங்கத்தினரது ஒத்துழைப்பை எதிர்பார்க்க கூடாது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சர்வகட்சி மாநாட்டை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதைய நெருக்கடி நிலைமையினை கருத்திற்கொண்டு அரசியல் நோக்கங்களை துறந்து ஒன்றினைந்து நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்றார்.