(நீர்கொழும்பு நிருபர் ஷாஜஹான்)
மூன்று வருடங்களுக்கு முன் நமது நாட்டில் இடம்பெற்ற நாசகார செயலை நாங்கள் மறக்க முடியாது. அதன் ஓர் அங்கமாக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சாந்த செபஸ்தியர் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்ட நமது சகோதரர்கள் கொல்லப்பட்டார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைக்கு அந்தச் சம்பவம் ஒரு காரணம் என நான் நம்புகிறேன். தற்போதைய அரசாங்கம் அன்று தேர்தல் இடம்பெற்ற போது இந்தச் சம்பவத்தை முழுமையாக பயன்படுத்தியது. அவர்கள் நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி அதற்கு பல்வேறு வகையிலும் முயற்சி செய்தார்கள் என்று நீர்கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் சதித்திட்டம் இருப்பதை அன்று நாங்கள் அறிந்து கொண்டதன் காரணமாகத்தான் முஸ்லிம்களுக்கு துன்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்று நாங்கள் தெரிவித்தோம். இப்போது எங்களுக்கு அந்த சதித்திட்டக்கார்கள் யார் என்பது தெரிய வந்து கொண்டிருக்கிறது.
இந்த சதித் திட்டகாரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. இனங்களிடையே பிரிவை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி இருந்தாலும் அவர்களால் அதனை பாதுகாத்துக் கொள்ள தெரியவில்லை. தற்போது இந்த நாட்டை எந்த வகையிலும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறியுமாறு நாங்கள் கடந்த இரண்டு வருட காலமாக இந்த அரசாங்கத்தை வேண்டினோம். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்மொழியப்பட்டவைகளை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வேண்டினோம்.
ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட முடிவுகளில் சிலவற்றை மாத்திரம் அவர்கள் நடைமுறைபடுத்திவிட்டு முஸ்லிம்கள்மீது மட்டும் பழியைச் சுமத்தினார்கள். அதில் குறிப்பிட்டுள்ளவற்றில் பெரும்பாலனவற்றை மறைத்து அதற்கு காரணமான சக்திகளை காப்பாற்றும் வகையில் நடந்து கொண்டார்கள். அதன் சாபமே இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையாகும். அந்த சம்பவத்தில் சிந்தப்பட்ட மனிதர்களின் இரத்தத்தின் சாபமே தற்போது அவர்களுக்கு கிடைத்துள்ளது.
தற்போது நாட்டில் சட்டத்துக்கு என்ன நடந்துள்ளது? சட்டமும் நீதியும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கியுள்ளது. சட்டமா அதிபரும் அரசாங்கம் சொல்லும் வகையில் தான் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
அதேபோன்று நாட்டில் இன, மதங்களுக்கு இடையில் பேதங்கள் மேலும் விரிவடைந்துள்ளன. வடக்கு கிழக்கு மக்கள் இந்த நாட்டில் ஒரு பிரிவினர் என்று நினைக்காமல் அவர்கள் வேறு வகையில் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த விடயத்தில் இந்தியாவின் தலையீடும் உள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் சுயாதீனத்திற்கு சில அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
அதேபோன்று எமது நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளது. நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன.
அண்மையில் வெளியிடப்பட்ட பென்டோரா ஊழல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்க்ஷ குடும்ப உறுப்பினர்கள் சிலர் தற்போது நாட்டை விட்டு சென்றுள்ளார்கள்.161 மில்லியன் டொலர் இவர்களினால் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.