Our Feeds


Friday, April 1, 2022

ShortTalk

மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது - ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கைக்கு இம்ரான் MP காட்டமான பதில்


 

மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.


மிரிகானையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற போராட்டத்தின் பின்னால்  அடிப்படைவாதிகள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


எரிபொருள், மின்சாரம், கேஸ், உணவு பொருட்கள் என அடிப்படை வசதிகள்  இன்றி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பொறுக்க முடியாமல் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கும் நிலை வந்துள்ளது. இதன் ஆரம்ப கட்டமே நேற்று மிரிகானையில் இடம்பெற்றது.


நாட்கள் செல்ல செல்ல நிலை இன்னும் மோசமாகலாம். ஆனால் இந்த மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதம் என்ற பெயரில் அரசாங்கம் திசை திருப்ப முயல்கிறது. அடிப்படைவாதம் பேசி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றதன் சாபத்தையே இந்த அரசு இப்போது அறுவடை செய்கிறது. ஆனால் இதில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் அடிப்படைவாதம், மதவாதம் பேசி மக்கள் போராட்டத்தை அரசு திசை திருப்ப முயல்வது நிலமையை இன்னும் மோசமாக்கும். 


அடிப்படைவாதத்தை தான் ஆட்சிக்கு வந்து அழித்துவிட்டதாக  ஜனாதிபதி அடிக்கடி கூறினார்.ஆனால் இன்று அவருக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்து எழுந்த போது  மீண்டும் அடிப்படைவாதத்தின் பெயரை கூறி அவர் தப்பிக்க முயல்வது ,யார் அடிப்படைவாதத்தின் பின்னால் உள்ளார்கள் என்பதை எடுத்து காட்டுகிறது. 


பட்டினியால் வாடும் மக்களுக்கு அடிப்படைவாதம் சோறு போடாது என்பதை பெரும்பான்மை மக்கள் உணர்ந்துவிட்டனர்.ஆகவே மிரிகானையில் ஆரம்பித்த மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதம் பேசி யாராலும் தடுக்க முடியாது.அடிப்படைவாதத்துக்கு பின்னால் ஜனாதிபதி ஒழிந்து கொள்ளாமல் மக்கள் நிம்மதியாக  வாழ்வதற்குரிய நாட்டை உருவாக்க வேண்டும்.இல்லை என்றால் இதைவிட பாரிய போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும் என்பதை அரசு உணர வேண்டும் என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »