நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் போது வன்முறையை தூண்டிய 59 சமூக ஊடக குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றின் நிர்வாகிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வீடுகள், வாகனங்கள் உட்பட சொத்துக்கள் மீதான தாக்குதல்களை நடத்த பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக செயற்படும் குழுக்கள், நபர்களை திரட்டியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சமூக ஊடக குழுக்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அது சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.