Our Feeds


Monday, May 9, 2022

ShortTalk

ஞான அக்காவின் மந்திரித்த தண்ணீர் “கோட்டா கோ கம” போராட்டக்காரர்களுக்கு மத்தியில் விநியோகம். - மக்கள் போராட்டத்தை அடக்க, மாறுபட்ட முயற்சி



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட மந்திரீகரான ‘ஞான அக்கா’வினால் மந்திரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள், காலிமுகத் திடல் ‘கோட்டா கோ கம’விலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக ஞாயிறு ஐலன்ட் பத்திரிகை செய்தி வெயியிட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்களை வசியம் செய்வதற்காக, ‘ஞான அக்கா’ என்று அழைக்கப்படும் ஜனாதிபதியின் தனிப்பட்ட மந்திரவாதி நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஞான அக்காவின் அனுராதபுர விகாரையை முற்றுகையிட முயற்சித்து 06 வாரங்கள் கடந்த நிலையில், ஞான அக்கா தனது நடவடிக்கைகளை கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் தொடங்கியுள்ளார்.


‘கோட்டா கோ கம’வுக்கு நன்கொடையாக அனுப்பப்பட்ட தண்ணீர் போத்தல்களுடன் – மந்திரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களும் அனுப்பப்பட்டதாகவும், இதணை ஆயிரக்கணக்கானோர் பருகியிருக்கலாம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ராணுவத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தண்ணீரைக் குடிப்பவர்கள் அடங்கிவிடுவார்கள் என்றும், இறுதியில் ஜனாதிபதி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான போராட்டம் கைவிடப்படும் என்றும், இந்த நடவடிக்கையின் பின்னணியிலுள்ளவர்களுக்கு ஞான அக்கா உறுதியளித்துள்ளார். அதேவேளை, ‘கோட்டா கோ ஹோம்’ எனும் பிரசாரம் தோல்வியடைந்து விடும் என்றும் ஞான அக்கா கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தண்ணீரை மந்திரிக்கும் சடங்கு கடினமாக இருந்ததாகவும், இந்த சடங்குக்குத் தேவையான இரண்டு டசன் எண்ணிக்கையுடைய ஒரு வகை காட்டுப்பூக்களை ஞான அக்காவின் அனுராதபுரம் மாவட்டத்தில் எளிதில் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்ததாகவும், அதனால், இந்தியாவிலிருந்து அந்தப் பூக்களைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கடந்த மார்ச் மாதம் பெருந்தொகையான பெண்களுடன் ஞான அக்காவின் விகாரைக்குச் செல்ல முயன்றதை அடுத்து, ஞான அக்கா தனது உயிருக்கு பயந்த நிலையில், வெளியில் தெரியாத இடத்தில் தஞ்சமடைந்தார் என ஞாயிறு ஐலண்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஞான அக்காவிடம் ஆலோசனை பெற விரும்புவதாக அப்போது ஹிருணிகா கூறியிருந்தார்.


ஞான அக்காவின் விகாரையை போராட்டக்காரர்கள் முற்றுகையிடவுள்ளதாக அப்போது கிடைத்த தகவலுக்கு அமைய, அவரின் விகாரைக்கு பொலிஸ் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »