Our Feeds


Wednesday, June 29, 2022

ShortNews

நாடு முழுவதும் இன்று 10 சதவீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில்



தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில், 10 சதவீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், பஸ் கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது, பஸ் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும், ஆகக்குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக உயர்த்தவும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறான இணக்கம் ஏற்படவில்லை என்றும், உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவுற்றதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கமும் தெரிவித்திருந்தன.

அதிகரிக்கப்பட்ட டீசல் விலைக்கு நிகராக தனியார் பஸ் பயணக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ஏனைய தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக குறித்த கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தின் நவம்பர் மாதம் முதல் இதுவரையான 7 மாத காலப்பகுதியில் 6 சந்தர்ப்பங்களில் பஸ் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் 20 சதவீதத்தினால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

ஆசன எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அனுமதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பின்னர், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 17.44 சதவீதத்தினாலும், மார்ச் மாதத்தில் 15 சதவீதத்தினாலும், ஏப்ரல் மாதத்தில் 35 சதவீதத்தினாலும் பஸ் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த மே மாதத்தில் 19.49 சதவீதத்தினால் பஸ் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 90 சதவீதமாக பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், புதிய பஸ்பேருந்து கட்டண உயர்வு தொடர்பான பரிந்துரைகளை இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சு அறிவிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு யோசனை நியாயமற்றதாகும் என பயணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »