Our Feeds


Wednesday, June 29, 2022

SHAHNI RAMEES

தப்பியோடிய கைதிகளில் 233 பேர் சிக்கினர்


 வெலிகந்த, கந்தகாடு பகுதியில் உள்ள சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 233 பேர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளர்  என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிலையத்தில் இருந்து சுமார் 600 கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

சிகிச்சைக்காக புனர்வாழ்வு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதைக்கு அடிமையான கைதியொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
 
நேற்று (28) இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன், மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக வெலிகந்தை பொலிஸ் நிலையத்தில் இருந்து குழுவொன்று வளாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணைக்கு வந்த பொலிஸாருடன் ஏற்பட்ட பதற்ற நிலை மோதலாக மாறியதை அடுத்து, இன்று (29) காலை 8 மணியளவில் புனர்வாழ்வு நிலையத்தின் பிரதான வாயிற்கதவுகள் இரண்டையும் வேலிகளையும் உடைத்துக்கொண்டு  600 கைதிகள் வரை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

சுமார் 1,000 கைதிகள் தங்கியுள்ள இந்த நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை இலங்கை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த அவர், நிலைமையை கட்டுப்படுத்தவும் தப்பியோடிய கைதிகளை கைது செய்யவும் இராணுவமும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை, கைதியின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் எனவும், குற்றவாளிகள் கண்டறிப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »