Our Feeds


Wednesday, June 29, 2022

ShortNews

கிழக்கு ஆளுநர் மற்றும் கல்வி அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயற்படுவதாக, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு



ஆசிரியர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதில் பாராமுகமாக செயற்படும் கல்வியமைச்சின் ஆலோசனைகளை, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்;


பரீட்சைத் திணைக்கள ஆணையாளரால் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிக் கடிதம் வழங்கியும் எதுவும் நடைபெறவில்லை.


தூர இடங்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை முழுமைாக மறுக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாத அதிகாரிகள் ஆசிரிய சமூகத்தை வதைக்கும் வகையிலான அறிவுறுத்தல்களை மாத்திரம் வெளிவிடுவது சங்கடத்திற்குரியதாகும்.


பொதுப் பரீட்சைகள் மற்றும் பருவகால விடுமுறைகள் என்பவற்றுக்கு ஒரே நாட்காட்டி நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் போது, கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கென தனியான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனால் எவ்விதமான பிரயோசனங்களும் கிடைக்கப் போவதில்லை.


எரிபொருளை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட காலப்பகுதி வரை பாடசாலைகளை மூடுவதாக விடுக்கப்படும் அறிவித்தல், கிழக்கு மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தனியாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வழங்குவதை ரத்துச் செய்து விட்டு, பொதுவான அறிவித்தல் விடுக்க வேண்டும்.


கைவிரல் அடையாளம் இடும் இயந்திரப் பாவனையினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும்.


குறிப்பிட்ட ஆசிரியர்களைக் மாத்திரம் வரவழைத்து நடத்தப்படும் பாடசாலைகளால் மாணவர்களுக்கான முமுப் பயனைப் பெறச் சந்தர்ப்பம் இல்லை என்பதுடன், எரிபொருள் பிரச்சினையால் கிழக்கு மாகாண முன்னணிப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


ஆசிரியர்களது இவ்வாறான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் அடுத்த சில தினங்களில் பாடசாலை பகிஷ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என, இலங்கை இஸ்லாமிய ஆசிரயர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »