Our Feeds


Thursday, June 2, 2022

ShortTalk

தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் இல்லை! -பிரதி சொலிசிடர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க



(எம்.எப்.எம்.பஸீர்)


மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

சட்டமாதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிடர் ஜெனரால் அய்ஷா ஜினசேன இதனை கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று (01) அறிவித்தார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு மேலதிகமாக மஹிந்த காந்தகம, திலிப் பெர்ணான்டோ, நிஷாந்த ஜயசிங்க ஆகியோரையும் சந்தேக நபர்களாக பெயரிடுவதாக மேலதிக சொலிசிடர் ஜெனரால் அய்ஷா ஜினசேன அறிவித்தார்.

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதாக தாக்குதல்கள் தொடர்பான நீதிவான் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நேற்று (1) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது விசாரணைகள் தொடர்பில் விளக்கமளிக்கவும் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றாமை தொடர்பிலும் விளக்கமளிக்க பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேற்று மன்றில் நேரில் ஆஜராகியமை விசேட அம்சமாகும்.

நீதிமன்றில் ஆஜரான பொலிஸ்மா அதிபரிடம் நீதிவான் கேள்வி கணைகளை தொடுத்து விளக்கம் கோரினார்.

கேள்வி – இந்த விவகாரத்தில் விசாரணைகளுக்கு பொறுப்பாளர் யார் ?

பதில்- சிஐடி.யின் பிரதி பொலிஸ்மா அதிபர்.

இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த சிஐடி பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க தனது கட்டுப்பாட்டில் பணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

கேள்வி – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோணின் நிகழ்நிலை (சூம்) கலந்துரையாடல் தொடர்பில் விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா ?

சிஐடியின் அதிகாரிகள் பதில் – ஆம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கலந்துரையாடலில் பங்கேற்ற அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக அவரது தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளோம்.

கேள்வி – இந்த விசாரணைகளில் பொறுப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர், எனினும் தேசபந்து தென்னகோன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அவ்வாறாயின் தனது பதவி நிலையை விட குறைந்த நிலையையுடைய ஒருவருக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதல்லவா?

பொலிஸ்மா அதிபர் பதில் - ஆம்,

கேள்வி – அப்படியானால் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை விசாரணைகளுக்கு பொறுப்பாக நியமிக்கலாம் அல்லவா,?

பொலிஸ்மா அதிபர் பதில் – முடியும்

கேள்வி – அந்த அதிகாரியை இப்போதே பெயரிடலாமா ?

பொலிஸ்மா அதிபர் பதில் - ஆம், குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வாவை நியமிக்கிறேன்.

இதனையடுத்து பொலிஸ்மா அதிபருக்காக பிரதி சொலிசிடர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க எழுத்து மூல அறிக்கையொன்றை சமர்ப்பித்து தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பிலான அதிகாரம் அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கே உள்ளதாகவும் அறிவித்தார். 


எனினும் தேசபந்து தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பரிந்துரை பொதுமக்களின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அவர்களே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »