Our Feeds


Tuesday, June 7, 2022

ShortTalk

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்வை விமர்சித்த இந்திய ஆளும் கட்சி நிர்வாகி - சவுதி உள்ளிட்ட முழு அரபுலகமும் கடும் கண்டனம்இந்தியப் பிரதமர் மோடியின் முயற்சியால் வளைகுடா நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலிலில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா, நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வின் டெல்லி ஊடகப் பிரிவின் நிர்வாகியான நவீன் ஜிண்டாலும், நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது, சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.


நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு இந்தியாவில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. நுபுர் சர்மாவின் கருத்தைக் கண்டித்து பல மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இந்த விவகாரத்தையொட்டி, உத்தரப்பிரதேசத்தில் வன்முறை சம்பவம் ஏற்பட்டு சுமார் 40 பேர் காயமடைந்தனர். கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்ததையடுத்து, நவீன் ஜிண்டால் தனது ட்விட்டர் பதிவை நீக்கினார்.

நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்த கருத்து இஸ்லாமிய நாடுகளைக் கொந்தளிக்கவைத்துள்ளன. `இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம்’ என்கிற ஹேஷ்டேக் அரபு நாடுகள் முழுவதும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. அரபு நாடுகளின் கண்டனத்தைக் கண்டு இந்திய அரசு அதிர்ச்சியடைந்தது. நுபுர் சர்மாவை கட்சியிலிருந்து பா.ஜ.க இடைநீக்கம் செய்திருக்கிறது. நவீன் ஜிண்டால் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும், உள்நாட்டுப் பிரச்னையாக மட்டுமல்லாமல், சர்வதேசப் பிரச்னையாகவும் இது மாறியிருக்கிறது. இப்படியான சூழலில், இடைநீக்க நடவடிக்கையோ, கண்டன அறிக்கையோ போதுமானது அல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். குவைத், கத்தார், ஈரான் ஆகிய நாடுகள் இந்தியத் தூதர்களை அழைத்து விளக்கம் கோரியுள்ளன. ஓ.ஐ.சி எனப்படும் 57 இஸ்லாமிய நாடுகளைக் கொண்ட அமைப்பு, நபிகள் நாயகத்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக இந்தியாவை விமர்சித்துள்ளன.

சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ரீதியாக பா.ஜ.க நடவடிக்கை எடுத்துவிட்டது. கட்சி சார்பில் விளக்க அறிக்கையும் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, பிரச்னை முடிந்தது என்று பா.ஜ.க-வும் இந்திய அரசு கருதுகிறது. ஆனால், வளைகுடா நாடுகளில் இந்தப் பிரச்னையால் ஏற்பட்ட கொந்தளிப்பு அடங்கவில்லை. இந்தப் பிரச்னை அடங்க வேண்டுமென்றால், பா.ஜ.க-வின் தலைமையும், இந்திய அரசும் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது. இல்லையென்றால், அரபு நாடுகள், ஈரான் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவில் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், குவைத் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்’ உடனான இந்தியாவின் வர்த்தகம் 87 பில்லியன் டாலராக 2020-21 ஆண்டில் இருந்தது. இந்த நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான டாலர்களை அந்நிய செலாவணியாக இந்தியாவுக்கு வருகின்றன.


பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து வளைகுடா பிராந்தியத்துக்கு மோடி பலமுறை சென்றுவந்திருக்கிறார். அதன் மூலமாக அந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, அமீரகத்துடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும் விரிவடைந்த ஒப்பந்தங்களுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் இந்தியா பேச்சு நடத்திவருகிறது.

இந்த நிலையில், ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களாலும் நேசிக்கப்படுகிற நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க-வின் தேசிய செய்தித்தொடர்பாளர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. வளைகுடா நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கு மத்திய பா.ஜ.க அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.


இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் பா.ஜ.க-வினரால் தொடர்ந்து பேசப்பட்டுவரும் நிலையில், அத்தகைய போக்கைத் தடுத்துநிறுத்தும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதுதான், இஸ்லாமிய நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பையும் இந்தியாவின் நலன்களையும் காக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


இந்தியப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கத்தார், குவைத் ஆகிய நாடுகளின் கடைகளில் இந்தியப் பொருள்களை விற்பனைப் பகுதியிலிருந்து அகற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால், வளைகுடா நாடுகளிலும் ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அந்நாடுகளின் அரசுகள் ஆலோசித்துவருகின்றன.


AV

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »