Our Feeds


Tuesday, June 7, 2022

ShortTalk

நீங்கள் வழங்கும் தண்டனை இந்நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்! - பிரதி சொலிசிட்டர் நீதிமன்றில் கருத்து.(எம்.எப்.எம்.பஸீர்)


மேல் மாகாண முதலமைச்சராக இருந்தபோது, காணி ஒன்று தொடர்பில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி உறுதிமொழிக் குறிப்பைக் கையெழுத்திட்டுக் கொண்டமை தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் அத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

அத்துடன் குறித்த குற்றம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 25 மில்லியன் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு ( முறைப்பாடளித்தவர்) ஒரு மில்லியன் ரூபா நட்ட ஈடு செலுத்தவும் உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான தீர்ப்பை அறிவித்தார்.

மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்க இருந்தபோது, மீத்தொட்டமுல்லை பகுதியில் சதுப்பு நிலப் பகுதி ஒன்றை நிரப்புவதற்கு தேவையான அனுமதியை வழங்கவும், அந்த நிலப்பகுதியிலிருந்து சட்டவிரோத குடியிருப்பாளர்களை வெளியேற்றவும், கிஹான் மெண்டிஸ் எனும் வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபாவை கோரி அச்சுறுத்தியமை, உறுதிமொழிக் குறிப்பொன்றை கையெழுத்திட்டுக் கொண்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதிக்கும் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் குற்றம் இழைத்ததாக கூறி, சட்ட மா அதிபரால் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் பரீக் ஆகியோருக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மூன்றாவது பிரதிவாதியான நரேஷ் குமார் பரீக் என்பவர், வழக்கு விசாரணை ஆரம்பிக்க முன்னரேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அவர் இல்லாமலேயே குறித்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் விசாரணை செய்தது.

சாட்சி விசாரணைகள் நிறைவுற்ற நிலையில், நேற்று ( 6) குறித்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி மஞ்சுள திலகரத்னவால் அறிவிக்கப்பட்டது.

இதன்போது தீர்ப்பை அறிவிக்க ஆரம்பித்த நீதிபதி, முதலில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் 2 ஆம் பிரதிவாதியான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவி மொரின் ரணதுங்க, 3 ஆம் பிரதிவாதி நரேஷ் குமார் பாரிக் ஆகியோரை விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.

எனினும் தொடரப்பட்டிருந்த 15 குற்றச்சாட்டுக்களில், 13 ஆவது குற்றச்சாட்டான, அச்சுறுத்தி உறுதி மொழிக் குறிப்பொன்றைக் கையெழுத்திடச் செய்து பெற்றுக் கொண்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக நீதிமன்றம் காண்பதாக நீதிபதி அறிவித்தார்.

குற்றவாளியான பிரசன்ன ரணதுங்க, தனக்கு சட்ட ரீதியாக சொந்தமற்ற ஒரு சொத்தை சட்ட விரோதமாக பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாக தீர்ப்பை அறிவித்து திறந்த நீதிமன்றில் நீதிபதி மஞ்சுள திலகரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில், குற்றவாளியாக காணப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்பில் தண்டனை வழங்கப்படும்போது, இலகு ரக தண்டனை ஒன்றை வழங்குவது தொடர்பில் மன்றில் நியாயங்களை முன்வைக்க குற்றவாளி தரப்புக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளி பிரசன்ன ரணதுங்க சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, விடயங்களை முன்வைத்தார்.

‘ கனம் நீதிபதியவர்களே, எனது சேவை பெறுநர் 2022 மார்ச் 20 ஆம் திகதி சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அண்மையில் கடந்த மே 9 ஆம் திகதி , காலி முகத்திடல் அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பதிவான வன்முறைகளில் எனது சேவை பெறுநரின் வீடு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையால், அவரது மகளின் திருமணம் பிற்போடப்பட்டுள்ளது.

அதனால் அவரது மகள் தற்போது மன அழுத்தத்தில் இருக்கின்றார். அத்துடன் ஒரு நீதிமன்ற உத்தரவையடுத்து, நாட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்து , உலகில் எமது நாடு தொடர்பில் தவறான விம்பம் ஒன்று தோன்றியுள்ளது.

அதன்படி பார்க்கையில் எனது சேவை பெறுநர் ஓர் அமைச்சரவை அமைச்சர். அவருக்கு எதிராக கடுமையான தண்டனை ஒனறை வழங்கினால், அமைச்சரவையின் ஸ்திரத்தன்மையை பேண முடியாது எனும் கருத்து உலகுக்கு செல்லலாம். அதனால் எனது சேவை பெறுநர் குற்றவாளியாக காணப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் குறைந்த பட்ச தண்டனையை வழங்குமாறு கோருகின்றேன். ‘ என குறிப்பிட்டார்.

இதனையடுத்து தண்டனை எவ்வாறு அமைய வேண்டும் என வழக்கை நெறிப்படுத்திய அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடயங்களை முன் வைத்தார்.

‘ கனம் நீதிபதியவர்களே, இது முதல் சந்தர்ப்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு நிலைமை அல்ல. நான்கு வருடங்களாக மக்களின் வரிப் பணத்தை விரயம் செய்து, முறைப்பாட்டாளர் தரப்பு வழக்கை நெறிப்படுத்திய நிலையிலேயே இன்றைய தீர்ப்பு கிடைத்துள்ளது.

தனது அதிகார பலம், பதவியை பயன்படுத்தி சாதாரண மக்களை அச்சுறுத்த முடியாது என்பதற்கு இன்று நீங்கள் வழங்கும் தண்டனை நாட்டின் ஆட்சியாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும். இந்த குற்றவாளியை, மக்கள் வாக்களித்து மேல் மாகாண சபைக்கு அனுப்பியது ‘ டீல் ‘ களை செய்து கொள்வதற்காக அல்ல. இவ்வாறானவர்கள் இன்னும் இருப்பார்களேயேனால் அவர்களது கண்களும் திறக்கும் வண்னம் நீங்கள் அளிக்கும் தண்டனை இருக்க வேண்டும்.

மேல் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த போது, மீதொட்டமுல்லை பகுதியில் சதுப்பு நிலப் பகுதியொன்றினை நிரப்பவும், அங்கு சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றவும் வர்த்தகர் ஒருவரிடம் 64 மில்லியன் ரூபாவை அச்சுறுத்தி பெற்றுக் கொள்ள முயன்ற விவகாரமே இவ்வழக்காகும். அதாவது 640 இலட்சம் ரூபா நீதிபதியவர்களே. இதற்காக இவர்களுக்கு வாக்களித்து மக்கள் அனுப்பி வைத்தார்கள்.

குற்றவாளியின் சட்டத்தரணி, கடுமையான தண்டனை அளித்தால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறுகிறார். அவரவர் விதைத்தவைகளையே இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே கனம் நீதிபதியவர்களே, சமூகத்துக்கு மிகத் தெளிவான தகவலை வழங்குவதாக உங்களுடைய தீர்ப்பு அமைய வேண்டும் என்பதே முறைப்பாட்டாளர் தரப்பின் எதிர்ப்பார்ப்பாகும்.’ என்றார்.

இதனையடுத்து தண்டனை குறித்த தீர்ப்பை அறிவித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றவாளியான பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.
25 மில்லியன் ரூபா அபராதத்தை விதித்த நீதிபதி, அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈட்டை செலுத்துமாறும் அதனைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.

இந் நிலையில் அபராதம் மற்றும் நட்ட ஈடு செலுத்துவது தொடர்பில் வழக்கானது எதிர்வரும் 20 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »