வத்தளை – மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றில் 74 வயதான பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகளின் கணவர் (மருமகன்) சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு 1.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையான நேரத்துக்குள் வீட்டுக்குள் புகுந்த சந்தேக நபர், அலுமாரி மற்றும் பெட்டிகளைத் திறந்து பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்களைத் திருடியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதன்போது 74 வயதான பெண்ணையும் சந்தேக நபர் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான பொலிஸாரின் விசாரணைகளில் மருமகனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, தனது மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாகவும் அதன்போதே கொலை செய்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளார்.
பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளரான உயிரிழந்த பெண்ணுக்குச் சொந்தமான 40 மில்லியன் ரூபா பண வைப்புத் தொகைக்கான ஆவணங்கள் தங்க நகைகள் மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் உட்பட பலவற்றை மஹாபாகே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
