Our Feeds


Monday, June 27, 2022

ShortNews

இலங்கைக்கு கடந்த வாரம் வரவிருந்ததாகக் கூறப்பட்ட எரிபொருள் கப்பல் தற்போது இந்தியாவிலுள்ளது. - அனுர எழுப்பும் சந்தேகங்கள்.



(எம்.மனோசித்ரா)


இலங்கைக்கு கடந்த வாரம் வரவிருந்ததாகக் கூறப்பட்ட எரிபொருள் கப்பல் தற்போது இந்தியாவிலுள்ளது. முறையான விலை மனு கோரலின் அடிப்படையில் முன்பதிவு செய்யப்படாத இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமா இல்லையா என்பது சந்தேகத்திற்குரியது. இதனால் முழு நாடு;ம் ஸ்தம்பிக்கக் கூடிய விளிம்பில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.


யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக வலு சக்தி அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார். இன்று 26 ஆம் திகதியாகின்ற போதிலும் , எந்தவவொரு கப்பலும் நாட்டை வந்தடையவில்லை. தற்போது அந்த கப்பல் இலங்கையின் எல்லையைத் தாண்டி கிருஸ்ணபட்டணம் பகுதிக்குச் சென்றுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த கப்பல் தற்போது இந்தியாவிலுள்ளது. இது உரிய விலைமனு கோரலின் அடிப்படையில் வரவழைக்கப்பட்ட கப்பல் அல்ல. அவசர இறக்குமதியாளர்கள் ஊடாக நடுக்கடலில் காணப்பட்ட கப்பலே இவ்வாறு வரவழைக்கப்பட்டது. குறித்த கப்பல் இலங்கைக்கு வருமா இல்லையா என்பது பெரும் சந்தேகத்திற்குரியதாகவுள்ளது.

எனவே முழு நாடும் ஸ்தம்பிதமடையக் கூடிய விளிம்பில் நாம் உள்ளோம். அமெரிக்காவிலுள்ள வங்கியொன்றின் பிணைமுறிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை ஜூலை 18 ஆம் திகதி காலாவதியாகவுள்ளன. இவ்வாறிருக்க அரசாங்கம் கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க ரிசேர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ராஜபக்ஷ குடும்பம் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்துள்ளதாக குறித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சீசெல்ஸ் போன்ற வரி சலுகை வழங்கப்படும் நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் , குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது , ‘ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நரகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலை விட மோசமானது.’ என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இன்று முழு நாடும், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர். இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளனர். விவசாயிகள், மீனவர்கள், அரச சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ளன. இடைக்கிடை பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது என்ன நாடு? இதனை நாம் மாற்ற வேண்டாமா?

ஆட்சியாளர்கள் இதற்கு பொறுப்புகூற வேண்டாமா? இது இயற்கையாக தோற்றம் பெற்ற அழிவு அல்ல. வெள்ளம் அல்லது சூறாவளியினால் உருவான அழிவல்ல இது. நாட்டை இந்த நிலைமைக்கு உள்ளாக்கியுள்ள ஆட்சியாளர்களை பதவி நீக்குவதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »