Our Feeds


Wednesday, July 6, 2022

SHAHNI RAMEES

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து கோட்டாவை விரட்ட வேண்டும். - ரிஷாட் சாட்டை

 

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றுபட்டு, ஒரே குரலில் ஜனாதிபதி கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதே தொனியில் கோரிக்கை விடுப்பதன் மூலமே நாட்டுக்கு விடிவு கிடைக்கும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“இன்றைய அமர்விலே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட நாட்டின் மோசமான நிலையை, அரசாங்கம் விட்ட தவறுகளை சுடிக்காட்டக்கூடியவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு சுட்டிக்காட்டுபவர்களிடம், ஏன் நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாட்டைக் குட்டிச்சுவராக்கிய ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்ல வேண்டுமென கோர முடியாது? என கேட்க விரும்புகின்றேன். ஒரு தனி நபர் ஆட்சிக் கதிரையில் அமர வேண்டும் என்பதற்காக, இன்று நாட்டில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்கள் பாதையோரங்களில் படுகின்ற அவஸ்தைகளையும் அவலங்களையும் கண்டு வேதனை அடைகின்றோம். நேற்றுக்கூட பொரளையில் ஒருவர் பெற்றோல் வரிசையில் மரணித்திருக்கின்றார். ஒரு இளைஞர் புகையிரதத்தில் பயணிக்கும்போது மரணித்துள்ளார். ஒரு தாய் பச்சிளங்குழந்தையோடு பஸ்ஸில் ஏறுவதற்காக வெயிலிலே நிற்பதை ஊடகங்கள் வாயிலாக நாம் கண்டோம்.

இதேபோன்று, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது அவலங்களை கொட்டுகின்றனர். எரிபொருளுக்காவும், எரிவாயுவுக்காகவும் பாதையிலே படுத்துறங்கி, அதனை பெற்றுக்கொள்ள வேண்டுமென தவிக்கின்றனர். குறிப்பாக, அந்தப் பிரதேசத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்கச் செல்ல மண்ணெண்ணெய் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய தொழில் முற்றாக நாசமாகியுள்ளது. அவர்கள் எல்லோருமே இப்பொழுது சீரழிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி எடுத்த தவறான முடிவின் காரணமாக பெரும்போக பயிர்ச்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள், ஒரு இலட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பஞ்சத்தில் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றனர். ஒருவேளை தானும் சாப்பிட முடியாத துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விவசாய அமைச்சர் சிறுபோகத்துக்கு உரம் வழங்குவோம் என கூறுகின்றார். ஆனால், இற்றைவரை எதுவுமே நடைபெறவில்லை. உரம் இன்னும் நாட்டுக்கு வந்து சேரவில்லை என அவர் பாராளுமன்றில் இன்று கூருகின்றார். இந்த அரசாங்கம் திட்டமிடல் இல்லாது இயங்குகின்றது.

நாட்டின் ஜனாதிபதி இரக்க சிந்தனை உள்ளவராக இருந்தால், இந்த கஷ்டங்களை எல்லாம் உணராமல் இருக்க முடியாதே! தமது உறவினர்கள் இவ்வாறு குழந்தைகளுடன் பாதைகளில் நின்று அவஸ்தைப்படுவதை ஜனாதிபதி பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருப்பாரா? என்று நான் அவரிடம் கேட்கின்றேன். அவர் மீது பாசம்கொண்டு வாக்களித் 69 இலட்சம் மக்கள் மீது அணுவளவு கூட இரக்கம் இல்லாத ஜனாதிபதியாக அவர் இருக்கின்றார். அவர் உண்மையாகவே மக்கள் மீது இரக்கம் கொண்டிருப்பரே ஆனால், ஒரு நிமிடம் கூட இந்த ஆசனத்தில் இருக்க முடியாது. அவருக்கு மனச்சாட்சியும் இல்லை, மக்கள் மீது இரக்கமும் இல்லை என்பதையே அவரது தொடர்ந்தேர்ச்சியான செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் புலப்படுத்துகின்றன.

தற்போதைய காலகட்டத்தில், நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றுபட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியால் இந்த நாட்டை தொடர்ந்தும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என்பதையும், நிருவாகத்தை முன்னெடுத்து செல்ல முடியாது எனபதையும் அவர் நிரூபித்துவிட்டார். எனவே, அவரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மக்களை பட்டினியால் சாகடிக்க முடியாது. மக்களை தொடர்ந்தும் துன்பத்துக்கு ஆளாக்க முடியாது.

மீனவச் சமூகம், விவசாயச் சமூகம், நகர்ப்புற, கிராமப்புற மக்கள் அனைவருமே தற்போது கஷ்டத்தில் விழுந்துள்ளனர். அதிக விலைக்கு எரிபொருட்களை திருட்டுத்தனமாக விற்கின்றனர். இவ்வாறு மிக மோசமான, கீழ்நிலையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்குமிங்குமாக உள்ள மக்கள் பிரதிநிதிகளை திருட்டுத்தனமாகப் பிடித்து ஆட்சியை கொண்டு செல்கின்றனர்.

எனவே, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்த வேண்டும். லக்ஷ்மன் கிரியெல்ல, தினேஷ் குணவர்தன போன்ற மூத்தவர்கள் இந்த நாடாளுமன்றில் இருக்கின்றனர். எல்லோரும் ஒன்றுபட்டு சிறந்த ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யுங்கள். சகல கட்சிகளையும் சேர்த்து அரசொன்றை நிறுவுங்கள். திட்டமிட்டு செயலாற்றுங்கள். மக்கள் படும் கஷ்டங்களை எவ்வாறு போக்க முடியும்? என்று திட்டமிடுங்கள். அதைவிடுத்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, நீங்கள் அவருக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டிருந்தால் நாடு தொடர்ந்தும் சீரழியும்.

அத்துடன், அவருடன் கதைக்கக் கூடிய, துணிவிருக்கக் கூடிய எவராவது சென்று “நீங்கள் பெயில்” எனவும் “உங்களால் தொடர்ந்தும் இந்த பயணத்தை தொடர முடியாது” எனக் கூறி, அவருக்கு உண்மையான நிலவரத்தை உணர்த்துங்கள். இவ்வாறு நீங்கள் கூறத் தயாராகவில்லை என்றால், இறைவனிடத்தில் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த ஜனாதிபதியின் பிழையான நிருவாகம், முகாமைத்துவம், தவறான வழிகாட்டல்களால்தான் நாடு இவ்வவளவு மோசமடைய காரணம் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள். மஹிந்த ராஜபக்ஷவை வெளியேறுங்கள் என்று கூறி மக்கள் நாடு முழுவதிலும் இறங்கி போராடவில்லை. கோட்டாதான் வீட்டுக்கு போக வேண்டுமென மக்கள் போராடுகின்றனர். இன்று வரை அதைத்தான் கூறுகின்றனர். ஆனால், ஜானதிபதி கோட்டா, தான் வெளியேறாமல் முன்னாள் பிரதமர் மஹிந்தவை துரத்திவிட்டு, தான் தொடர்ந்தும் ஆட்சிக் கதிரையில் இருப்பதற்காக இந்த விளையாட்டுக்களை மேற்கொண்டு வருகின்றமையை, நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகமே பார்த்து வேதனைப்படுகின்றது.

எனவே, இந்த மோசமான யுகம் மாற வேண்டுமாக இருந்தால், கோட்டாபய பதவி விலக வேண்டும். அதைவிட வேறு எந்த முடிவுகளும் இந்த நாட்டுக்கு எந்த விடிவையும் தரப்போவதில்லை. அதேபோன்று, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஜனாதிபதி கோட்டா வெளியேற வேண்டுமென்ற கோஷத்தை முன்வைத்து, ஒன்றுபட்டு கோரிக்கை விடுக்க வேண்டுமென்று வேண்டுகின்றேன்” என்று கூறினார்.ளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றுபட்டு, ஒரே குரலில் ஜனாதிபதி கோட்டா வீட்டுக்கு செல்ல வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதே தொனியில் கோரிக்கை விடுப்பதன் மூலமே நாட்டுக்கு விடிவு கிடைக்கும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »