Our Feeds


Monday, July 18, 2022

ShortTalk

நாட்டுக்காக ஒன்றிணையுங்கள் | பதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கோரிக்கை(எம்.மனோசித்ரா)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணைகளும் நிறைவடையாமலுள்ளமையும் தற்போது நாட்டிலுள்ள பெரும் பிரச்சினையாகும்.


இந்த விசாரணைகளை தாமதமின்றி நிறைவடையச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால் , அதற்கு பிரித்தானிய புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே இன்று நாட்டில் காணப்படும் பிரதான அரசியல் பிரச்சினையாகும்.

அதனை நீக்குவதற்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மீள நடைமுறைப்படுத்துதற்கான சட்ட மூலத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இன்று திங்கட்கிழமை (18) விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நான் கடந்த மே 13 ஆம் திகதி பிரதமராக பதவியேற்ற போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருந்தன.

அவற்றை தீர்ப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். அன்று மின்துண்டிப்பு 5 மணித்தியாலங்களாகக் காணப்பட்டது. இன்று 3 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.

உரப்பிரச்சினை

சிறுபோகத்திற்கான உரம் காணப்படுகிறது. பெரும் போகத்திற்கான உரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெரும் போகத்தின் ஊடாக தன்னிறைவு பொருளாதாரத்தை அடைவதையே நாம் விரும்புகின்றோம். அந்த இலக்கை மறக்கப்போவதில்லை.

எரிவாயு, எரிபொருள்

இன்று தொடர்ந்தும் சமையல் எரிவாயு விநியோகிகப்படுகிறது. அதே போன்று டீசலும் தடையின்றி வழங்கப்படும். 21 ஆம் திகதி முதல் பெற்றோல் தடையின்றி விநியோகிகப்படும். ஜூலை மாதத்தின் முதல் 3 வாரங்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய காலப்பகுதியாக இருக்கும் என்பதை ஜூன் மாதத்திலேயே கூறினேன்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளமையின் காரணமாக அதன் பயனை நுகர்வோருக்கு வழங்கியிருக்கின்றோம். அதே போன்று இரண்டரை ஏக்கல் நிலப்பரப்பில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கடன் இரத்து செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்

பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம். நட்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். பொருளாதார வீழ்ச்சியால் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டுள்ளோம். அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை தயாரிக்க வேண்டியுள்ளது.

உணவு பாதுகாப்பு

உணவு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்ற குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொரு விசாரணைகளும் முழுமையடையாமையும் தற்போதுள்ள பெரும் பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த பிரச்சினையை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். தினமும் இந்த பிரச்சினையை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவை கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தவிர , மேலும் பல அறிக்கைகள் உள்ளன. எனவே இது தொடர்பில் மீண்டும் மதிப்பீடு செய்ய விரும்புகின்றேன். இந்த விசாரணைகள் நிறைவுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளிக்கின்றேன். அதற்கமைய பிரித்தானியா மற்றும் அந்நாட்டு புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்புகள் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. எவ்வித தாமதமும் இன்றி இதனை நிறைவுக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது. இது நாட்டு மக்கள் பிளவடைந்தமைக்கு ஏதுவாய் அமைந்த பிரதான காரணியாகும்.

19 ஆவது திருத்தம்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மீள நடைமுறைப்படுத்துதற்கான சட்ட மூலத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியிருக்கின்றேன். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே இன்று நாட்டில் காணப்படும் பிரதான அரசியல் பிரச்சினையாகும். 19 ஆவது திருத்தத்தின் பின்னர் இது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எமக்கு வாய்ப்பு கிட்டும்.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள்

தற்போது நாட்டில் சட்டத்தை மீறி செயற்படும் சக்திகள் உள்ளன. இவற்றுக்கு எதிராக சட்டம் மற்றும் அமைதியை பாதுகாக்க வேண்டியுள்ளது. பாஸிச வாதத்தின் ஊடாக நாட்டின் சட்டத்தையும் , அமைதியையும் சீர்குலைக்க இடமளிக்க முடியாது.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அமைதியான போராட்டங்களின் ஊடாக நாட்டிலுள்ள அரசியல் முறைமையை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துபவர்களை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இந்நாட்டில் முறைமையை மாற்ற வேண்டியது அவசியம் என்றே நானும் கருதுகின்றேன். சில பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடும் , சில பிரச்சினைகள் தொடர்பில் வேறுபட்ட நிலைப்பாடும் காணப்படுகிறது.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாட்டின் முறைமையை மாற்றுவது குறித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மாத்திரமின்றி , அவர்களுக்கு அப்பால் மாற்றத்தை விரும்புபவர்களுக்கும் அதற்கான வாய்ப்பளிப்பதற்கு தயாராக உள்ளோம். இளைஞர்களின் நிலைப்பாடுகளுக்கமையவே நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பில் எனக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.

கட்சி அரசியல்

நிறைவேற்றத்திகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் பேசும் அதே வேளை , அரசியல் கட்சிகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் எதிர்ப்பினை வெளியிட்டு நாட்டை சீரழிப்பதா? அல்லது ஒருமித்து செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்புவதா என்பதே தற்போது முக்கிய அரசியல் பிரச்சினையாகும்.

இரு வருடங்களில் முழுமையாக மீள முடியும்

அடுத்த வருடம் நாம் இதனை விட சிறந்த நிலைமையில் இருப்போம். எதிர்வரும் இரு வருடங்களுக்குள் பொருளாதார நெருக்கடிகளை முழுமையாக சீராக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அதற்காகவே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்று அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »