Our Feeds


Wednesday, July 6, 2022

SHAHNI RAMEES

கோப் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை...!

 

கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கோப் எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் விசேட கூட்டத்தின் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கோப் குழு உறுப்பினர்கள் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில் பிரதானமாக மூன்று விடயங்கள் தொடர்பில் குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.

அதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கோப் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த மீளாய்வும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை ஓர் அறிக்கையாகத் தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையின் பிரதிகளை குழு உறுப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோப் தலைவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை மத்திய வங்கி, அரசாங்க மரக் கூட்டுத்தாபனம், மக்கள் வங்கி, அபிவிருத்தி லொத்தர் சபை, வரையறுக்கப்பட்ட கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா தனியார் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொடர்பான தீர்மானம் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட சில தீர்மானங்களுக்குரிய அறிக்கைகள் இதுவரை கோப் குழுவில் இன்னும் முன்வைக்கப்படவில்லை.

இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் கடுமையாகச் செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டுமென குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு நாடாளுமன்ற குழுவும் தலையிட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, நிலையியல் கட்டளைகளுக்கும் அரசியலமைப்புக்கும் அமைய வழங்கப்பட்டுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தின் பிரகாரம் குழு செயற்படுவதாகக் அதன் தலைவர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

அதேபோன்று, இனங்காணப்பட்ட முக்கிய நிறுவனங்களை மீண்டும் அழைத்து விசேட நடவடிக்கை எடுப்பதற்கு நாடாளுமன்றம் என்றவகையில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய வங்கியின் அரச கடன் மற்றும் நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப் குழு விசேடமாக கூடுவதற்கான தினம் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 19, 20, 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப் குழு விசேடமாகக் கூடவுள்ளது.

அதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர்களை அழைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி, கொள்வனவு, விநியோகம், திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கோப் குழு ஓகஸ்ட் மாதம் 2, 3, 4 மற்றும் 5ஆம் திகதிகளில் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »