கொழும்பு பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை பிரசவிக்கப்பட்ட குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக கொழும்பு காசல் மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தையின் குறைந்த எடை காரணமாக பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளதாக சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே காசல் மருத்துவமனை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக, கர்ப்பிணிப் பெண்ணொருவர் வரிசையில் காத்திருந்துள்ளார்.
அதன்போது, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை – காசல்வீதி மகளிர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் குழந்தையை பிரசவித்திருந்தார்.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையை பிரசவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
